நீட் தேர்விற்கு படிக்க வைப்பதாக கூறி பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ., கருணாநிதியின் குடும்பம் சிறுமியை அழைத்து சென்று பல்வேறு சித்ரவதைகளை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர், 12ஆம் வகுப்பில் 600க்கும் 433 மதிப்பெண் எடுத்த நிலையில் நீட் தேர்வு பயிற்சிக்கு பணம் தேவை பட்டதால், வறுமை காரணமாக பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகனான, அண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்ந்ததாகவும், பணிக்கு சேர்ந்த நாள் முதல் பல்வேறு கொடுமைக்குள்ளாகியதாக எம்.எல்.ஏ., மருமகள் மார்லீனா செய்து வந்தார் என சிறுமி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பல தரப்பில் இருந்து அழுத்தங்கள் வந்த பின்னரே போலீசார் அண்டோ மதிவாணன் அவரது மனைவி மார்லீனா மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் போலீசார் கைது செய்யாமல் இருந்த காரணத்தினால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சிறுமி தனக்கு சூடு வைத்து, மிளகாய்பொடியை கரைத்து குடிக்கவைத்து வேலை வாங்கியதோடு, கீழே படுக்கவைத்து காலால் மிதித்து உடல் முழுவதும் அடித்து கொடுமை படுத்தியதாக வேதனையுடன் தெரிவித்தார்.
தனக்கு சூடு போட்ட தழும்புகளை மறைக்க மருதாணி கோன் வாங்கி கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டிய அந்த சிறுமி தன்னை நீட் படிக்கவைப்பதாக கூறி ஏமாற்றி விட்டனர் என்றும் கொடுமையை தாங்க முடியாமல் இதனை வெளியில் சொல்லிருப்பதாக தெரிவித்தார்.
தனது மகளுக்கு எம்.எல்.ஏ., மருமகளால் நிகழ்ந்த கொடுமைகள் குறித்து கண்ணீர் மல்க விவரித்த சிறுமியின் தாய், தனது மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நியாயம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.