ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்: வழிநெடுகிலும் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு!

வரும் 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொண்டுள்ளார். ஆந்திராவில் வீரபத்ரன், கேரளாவில் குருவாயூர், கோவில் சென்று வழிபட்டார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 20) சிறப்பு பூஜைகள் நடத்துகிறார். இதற்காக பிரதமர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் வந்த அவர் கார் மூலம் கோவிலுக்கு சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.

108 வைணவத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு பட்டர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ரங்கநாதர், ராமானுஜர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் சன்னதியில் பிரதமர் வழிபட்டார்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய வேஷ்டி அணிந்து வந்தார். பொன்னாடை போர்த்தியபடி கை கூப்பி வணங்கியபடி சென்றார் பிரதமர்.

பிரதமர் மோடி காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் யானையிடம் ஆசிர்வாதம் வாங்க வந்த பிரதமர் மோடியிடம் ‘மவுத் ஆர்கன்’ வாசித்து காட்டி அசத்தியது ஆண்டாள் யானை. அன்போடு தடவிக்கொடுத்து மகிழ்ந்தார் பிரதமர்.

மேலும் ரங்கநாதசுவாமி கோவிலில் உள்ள மண்டபத்தில் தான் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் கவி சக்கரவர்த்தி கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார். அந்த வரலாற்று சிறப்புமிக்க மண்டபத்தில் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கம்பராமாயண பாடல்களை பாட கேட்டு நெகிழ்ச்சி அடைந்தார்.

பிரதமரின் ஸ்ரீரங்கம் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

ஸ்ரீ ரங்கம் 108 திவ்ய தேசங்களில் முதல் தேசம் ஆகம். ஸ்ரீ ரங்கத்தை பூலோக வைகுண்டம் என்பார்கள். கம்பர் இராமயணத்தை அரங்கேற்றிய இடமும் ஸ்ரீரங்கம் கோயில்தான்.

இராமபிரானின் முடி சூட்டு விழாவிற்கு பின் சீதையை மீட்கும் முயற்சியில் உதவிய விபிஷணன், தசரதர் வழிபட்ட ஸ்ரீ ரங்க விமானத்தையும் பெருமாளையும் இராமபிரானிடம் பரிசாகக் கேட்டுப் பெற்று இலங்கைக்கு எடுத்துச்சென்றார். இஷ்வாடு வம்சத்தின் வழிபாடு தெய்வம் அரங்கநாதர் என இதன் மூலம் அறியலாம். அதாவது ஸ்ரீ ராமரின் குலதெய்வம் அரங்கன் என்றும் கூறலாம்.

அவ்வாறு அதனை எடுத்துக் செல்லும் வழியில் விமானத்தை ஆற்றின் கரையில் வைத்துவிட்டு விபீஷணன் எவ்வளவு முயன்றும் அவனால் அந்த விமானத்தை தூக்க முடியாமல் போகவே அரங்கநாதர் அவர் முன் தோன்றி தான் இந்த இடத்தில் இருக்க விரும்புவதாக தெரிவித்தார். எனினும் விபீஷணனின் விருப்பத்தைக் நிறைவேற்றும் விதமாக தன் பார்வை விபீஷணன் ஆட்சி செய்யும் தென் இலங்கை நோக்கியே இருக்கும் என அருள் செய்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top