திமுக அரசு இந்து மக்களுக்கு எதிரான ஆட்சி நடத்தி வருகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை, கோபாலபுரம் வேணுகோபால் சுவாமி கோவில் வளாகத்தில் ஒளிபரப்பப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியை தலைவர் அண்ணாமலை கண்டுகளித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்;
மிக முக்கியமான சரித்திரம் நம் நாட்டில் நடந்திருக்கிறது. 500 ஆண்டுகளாக நம் மக்கள் பொறுமையாக இருந்தார்கள், தர்மத்தின் வழியில் ராமருக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய எஜமானாராக இருந்து நடத்திக் கொடுத்திருக்கிறார்.
சமகாலத்தில் நாமும் வாழ்கிறோம் என்ற அக மகிழ்வு அனைவருக்கும் கிடைத்திருக்கிறது.
83 வயது வரை பேசாமல் இருந்த பாட்டி அவரின் ஆத்ம பலத்திற்கு வேண்டுதலுக்கு இன்று பலன் கிடைத்தது. இந்திய மக்கள் அனைவரும் ஒரே தாய் ஒரே மக்கள் ஒரே பிள்ளை என்பதை இந்த அயோத்தி ராமர் கோவில் நிகழ்வு எடுத்துரைத்துள்ளது.
அறவழியில் ஆன்மீக நெறியில் தர்மத்தின் வழியில் பாஜக சொன்னபடி ஆட்சியில் இருக்கும் பொழுதே அயோத்தியில் ராமனுக்கு கோவில் எடுத்துள்ளோம்.
வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் நாம் அனைவரும் நின்று உள்ளோம், கோபாலபுரம் வேணுகோபால் சுவாமி கோவிலில் இதைப் பார்க்க நம் அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிகழ்வை தமிழக மக்கள் பார்க்க பெரிய சட்ட போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்படுத்தியது.
தமிழகத்தில் எங்கேயும் பிரச்சனை இல்லாமல் தனியார் கோவில்களில், இந்து அறநிலையத்துறை கோவில்களில் மக்களுக்கு உணவு அளித்து, இந்த நிகழ்ச்சியை பார்த்து மகிழ நீதிமன்ற அனுமதி வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு இருக்கும் திமுக அரசு இந்து மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்தி வருகிறது.
அறவழியில் தர்மத்தின் வழியில் வென்று காட்டுவோம் என்று சபதம் ஏற்று இருக்கிறோம் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
சென்னையில் 1142 இடத்தில் இந்த நிகழ்வு நடக்கிறது. இந்த வேணுகோபால் சுவாமி திருக்கோவில் நிர்வாகிகள் அன்போடு அழைத்ததின் பேரில் வந்தேன். எங்களைப் பொறுத்தவரை இதில் அரசியல் இல்லை. கேட்டவுடன் அனுமதி கொடுத்திருந்தால் இவ்வளவு பெரிய சட்ட போராட்டம் தேவையில்லை.
இந்து அறநிலையத்துறை வேண்டாம் என்று நான் சொல்வதற்கு இன்று மீண்டும் ஒரு காரணம் சேர்ந்துள்ளது. 2026 ஆம் பாஜக ஆட்சிக்கு வரும் போது இந்து அறநிலையத்துறை இருக்காது என்று கூறினார்.