வாக்கு அரசியலுக்காக, ஹிந்து மக்களையும், கடவுள்களையும் தவறாகப் பேசி, குளிர்காய்ந்து கொண்டிருந்த திமுகவுக்கு அயோத்தி ராமபெருமான் கோவில் விழா தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது என, திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று (23.01.2024) நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை பயணத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண், என் மக்கள் யாத்திரை பயணத்தில் அவர் ஆற்றிய உரையில்; ஆடுதுறை சூரியனார் கோவில், குமரகுருபரால் தோற்றுவிக்கப்பட்ட, சைவ சமயத்திற்கும் தாய்மொழி தமிழுக்கும் அருந்தொண்டாற்றிய பழமைவாய்ந்த திருப்பனந்தாள் காசி மடம், மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட, வாழ்வில் பயத்தை அகற்றும் திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில் என புண்ணியத் தலங்களால் நிறைந்த திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இங்குள்ள திருபுவனம் பட்டு, ஒரு வருடத்திற்கு 465 கோடி ரூபாய் வரை விற்பனையாகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு, திருபுவனம் பட்டுக்கு நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் புவிசார் குறியீடு வழங்கிப் பெருமைப்படுத்தினார்.
அயோத்தி ராமர் கோவிலில் நமது மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் பாலராமர் பிராணப் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு, தமிழகத்தில் இருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டது. சமீபத்தில் தமிழகம் வந்திருந்த நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், தமிழகத்தில் பகவான் ஸ்ரீ ராமருக்குத் தொடர்புள்ள மூன்று முக்கிய திருத்தலங்களான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் மற்றும் தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயில் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோவில்களுக்குச் சென்று வழிபட்டார்.
வாக்கரசியலுக்காக, ஹிந்து மக்களையும், கடவுள்களையும் தவறாகப் பேசி, குளிர்காய்ந்து கொண்டிருந்த திமுகவுக்கு, நேற்றைய அயோத்தி ராமபெருமான் கோவில் விழா, தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது. ஆலயங்களில் வழிபாடுகளைத் தடுக்க முயற்சித்த திமுகவை, நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. ஒவ்வொரு முறை திமுக ஆன்மீகத்திற்கு எதிராக செயல்படும் போதெல்லாம் தமிழகத்தில் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்படுகிறது. மக்களின் அடிப்படை வழிபாட்டு உரிமைகளை பறித்துவிட்டு, நாங்கள் பெருமாளையும் கும்பிடுவோம் பெரியாரையும் கும்பிடுவோம் என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஹிந்துக்கள் விழித்து கொண்டால் திமுகக்காரன் காவடி தூக்க கூட தயங்கமாட்டான் என்று அமரர் சோ ராமசாமி கூறியதில் பாதி உண்மையாகிவிட்டது.
தமிழகத்தில், ஊழலுக்கு எதிராக, குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் குரலெழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் கடந்த ஒன்பதாண்டு கால ஊழலற்ற ஆட்சி, தமிழகத்திலும் வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏழை எளிய மக்களின் நலனுக்கான பாஜக ஆட்சி தமிழகத்திலும் வரவேண்டும் என்ற விருப்பம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்துக்கு 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 3300 கோடி ரூபாய், 53,577 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக வீடு, 3,81,295 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர், 2,46,421 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,19,869 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,55,312 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,19,233 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 5,208 கோடி ரூபாய் முத்ரா கடனுதவி என லட்சக்கணக்கான மக்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பலனடைந்துள்ளனர்.
மாறாக, 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூறிய திமுக, ஆடுதுறையில் அரசு வேளாண்மைக் கல்லூரி, நாச்சியார் கோயில் குத்துவிளக்கு தயாரிப்பை ஊக்குவிக்க தஞ்சாவூர் அருகில் அதற்கென்று தனி கிராமம் என இந்தத் தொகுதிக்கு கொடுத்த இரண்டு வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து 25 நகைச்சுவைத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். மாநாடு முழுவதுமே போலி பிம்பங்களைக் கட்டமைத்திருக்கிறார்கள்.
வரும் பாராளுமன்றத் தேர்தல், தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையே நடக்கும் தேர்தல். பாரதப் பிரதமரின் நல்லாட்சிக்கும், திமுகவின் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல். நேர்மையான ஆட்சிக்கும் ஊழல் கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே நடக்கும் தேர்தல். இந்தியாவின் நன்மைக்காக, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் உயர, நேர்மையான நல்லாட்சி வழங்கி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் மக்களாட்சியைத் தொடரச் செய்வோம். தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.