திராவிடர் கழகம், மே 17 இயக்கம் போல பாஜகவை எதிர்க்கும் தேர்தலில் போட்டியிடாத இயக்கம்தான் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் என்று கருத வேண்டியிருக்கும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி தொடர்பாக, தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மு.அசீப் என்பவர் ஒருங்கிணைப்பில் மாற்றுத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் இன்று (ஜனவரி 25) மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
தி இந்து குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவரான என்.ராம், நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால், பத்திரிகையாளர் பீர் முகமது உள்ளிட்டோர் இதில் பங்கேற்க இருப்பதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரின் கருத்துடன் உடன்படவில்லை எனில் ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவிக்க அனைவரும் உரிமை உள்ளது. ஜனநாயகத்தை மதிக்கும் பாஜகவுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. ஆனால், பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் சில உண்மைகளை சொல்வது கடமை என நினைக்கிறேன்.
அச்சு ஊடகமாக இருந்தாலும், காட்சி ஊடகமாக இருந்தாலும் அதில் உள்ள பெரும்பாலான ஊடகவியலாளர்கள் பாஜகவுக்கு எதிராகவே செயல்படுகின்றனர். இதற்கு சமூக ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் இடும் பதிவுகளே சான்று. ஆனாலும், இது ஜனநாயகத்தின், கருத்துச் சுதந்திரத்தின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து யாரையும் எதிரியாக பாஜக பார்ப்பதில்லை. ஆனால், சில ஊடகவியலாளர்கள் மற்ற கட்சிகளின் தலைவர்களிடம் ஒரு விதமாகவும், பாஜக தலைவர்களிடம் ஒரு விதமாகவும் நடந்து கொள்கின்றனர். ஊடகச் சந்திப்புகளில் இணக்கமாக இல்லாமல், பாஜகவை எதிரி போல நினைத்து கேள்விகளை கேட்கின்றனர்.
வார்த்தைகளில், கேட்கும் தொனியில் வன்மம் வெளிப்படுகிறது. எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் பொறுமையாக கடந்துச் செல்ல முடியாது. சில நேரங்களில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதைத்தான் சில நேரங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்திருக்கிறார். அப்போதும்கூட நாகரிக எல்லையை அவர் மீறியதில்லை.
பத்திரிகையாளர்கள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முதல் பல தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளனர். அதிலும் ஆர்.எஸ்.பாரதி கூறியதைப்போல பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வார்த்தைகளை யாரும் சொல்லியிருக்க முடியாது. ஆனாலும், வருத்தம் தெரிவித்து விட்டார் எனக்கூறி அதை பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் அவர் கூறிய ஆபாச வார்த்தைகளை மறந்து மென்மையாக கடந்துச் சென்று விட்டன.
ஆனால், பாஜக தலைவர்கள் மட்டும் எதிர்வினையாற்றினால் பத்திரிகையாளர்கள் சிலர் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள். அதிலும் பாஜகவுக்கு எதிராகவே செயல்படுவதற்காகவே தொடங்கப்பட்டது போலவே, அசீப் தலைமையிலான மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் உள்ளன.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டியில் கேட்க மக்கள் நலன் சார்ந்த எத்தனையோ கேள்விகள் இருக்கும்போது, அவருக்கு சாதகமாக மக்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்காத கேள்விகள் கேட்கப்பட்டன. இதை சுட்டிக்காட்டவே, கொங்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் வட்டார வழக்குச் சொல் ஒன்றை அண்ணாமலை பயன்படுத்தினார். தவறான பொருளில் அந்தச் சொல்லை பயன்படுத்தவில்லை என்பதை அவர் தெளிவுப்படுத்தி விட்டார்.
அதன்பிறகும் அதற்கு தவறான பொருளை கற்பித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது வருத்தம் அளிக்கிறது. தலைவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இப்படி தவறான பொருளை கற்பித்தால் யாரும் எதையும் பேச முடியாது. எனவே, அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது. அதை கைவிடுவதுதான் ஆரோக்கியமானது. மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியே தீருவோம் என்றால், அதை பாஜகவுக்கு எதிரான, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் உள்நோக்கத்துடன் கூடிய செயல்திட்டமாக பார்க்க வேண்டியிருக்கிறது.
திராவிடர் கழகம், மே 17 இயக்கம் போல பாஜகவை எதிர்க்கும் தேர்தலில் போட்டியிடாத இயக்கம்தான் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் என்ற கருத வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.