அகிம்சை எனும் போராட்ட தத்துவத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று, உலகத் தலைவர்கள் பலருக்கு வழிகாட்டிய, மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினமான இன்று அவரது சுதந்திரப் போராட்டத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்;
கத்தியின்றி, ரத்தமின்றி தேசத்திற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினம் இன்று. 200 ஆண்டுகளாக நமது நாட்டை கொள்ளையடித்துவிட்டு நாங்கள் இல்லையேல் இந்தியர்களால் ஒரு குண்டூசியை கூட தயாரிக்க முடியாது என்று ஏளனம் செய்துவிட்டு சென்ற ஆங்கிலேயர்கள் ஆட்சியாளர்களுக்கு முன்பு சுதந்திர இந்தியாவை ஒரு வலிமையான தேசமாக கட்டமைத்து காட்ட வேண்டும் என்ற கனவு மகாத்மா காந்திக்கு இருந்தது.
ஒவ்வொரு கிராமமும் அதன் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதன் தற்சார்பு பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் காந்தி கண்ட கிராம சுயாட்சி. சுதந்திர கிடைத்து 70 ஆண்டுகளுக்கு பிறகு காந்தியடிகளின் சுயாட்சி கனவு நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் சத்தான உணவு, சுத்தமான குடிநீர், பாதுகாப்பான இருப்பிடம், சுகாதாரமான வாழ்க்கை, மகளிர் மேம்பாடு, தற்சார்புப் பொருளாதாரம் உள்ளிட்டவை நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மகளிர் முன்னேற்றம் நாட்டை முன்னேற்றும் என்ற மகாத்மாவின் சொல்லுக்கு ஏற்ப நாடு முழுவதும், முத்ரா கடன் உதவி மூலம் மகளிர் தொழில் முனைவோர்களை உருவாக்கியிருக்கின்றார். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்வு மேம்பட விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்க, பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக, சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள், மாணவர்களுக்கு உலகத் தரத்திலான புதிய கல்விக் கொள்கை என்று காந்தியடிகளின் இந்தியாவிற்காக கண்ட கனவுகள் ஒவ்வொன்றையும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
நமது நாடு பொருளாதாரத்தில் பல மடங்கு முன்னேறி வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு உலகப்பொருளாதார வரிசையில் 11வது இடத்தில் இருந்த இந்தியா எந்த நாடு நம்மால் ஒரு குண்டூசியை கூட தயாரிக்க முடியாது என்று கூறியதோ அதே இங்கிலாந்தை ஆறாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளி தற்போது உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி இருக்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மகாத்மா காந்தி விரும்பிய எளிய குடிமகனுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற ராமராஜ்ஜியம் தான் பாரதத்தில் நடைபெற்று வருகிறது என்றால் அது மிகையாகாது.
அனைவருக்கும் சமவாய்ப்புகள், ஏற்றத் தாழ்வற்ற சமூகம், தொலை நோக்குச் சிந்தனையிலான திட்டங்கள், என்று சுதந்திர இந்தியா எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என மகாத்மா காந்தி விரும்பினாரோ, அவை அனைத்தையும் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் கடந்த 10 ஆண்டுகால நல்லாட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. காந்தி கண்ட கனவு பிரதமர் மோடியால் மெய்ப்பட்டு வருகிறது.
இவ்வாறு தலைவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.