நமது குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பற்றியோ, எதிர்காலம் குறித்தோ திமுகவுக்கு அக்கறை இல்லை. மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தில் அரசியல் செய்துகொண்டிருக்கிறது என கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பயணத்தில் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் பயணத்தில் தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் கூறியிருப்பதாவது:
உலக மக்களின் நலனுக்காக அன்னை பார்வதி தவமிருந்த மலையான, 4,560 அடி உயரம் கொண்ட பர்வத மலை’ அமைந்திருக்கும் சட்டமன்ற தொகுதியான திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில், பெரும் எழுச்சியோடு கூடிய பொதுமக்களின் ஆதரவால் சிறப்புற்றது. கயிலைக்குச் சென்று சிவபெருமானைத் தரிசித்த பலன், பர்வத மலையைத் தரிசித்தால் கிடைக்கும். இந்த பர்வத மலையின் அடிவாரத்தில் உள்ள காடுகள், கரிகால் சோழன் ஆயிரம் யானைகளை தன் கண் அசைவுக்கு பழக்கிய வரலாறுடையது. மிக பிரசித்தி வாய்ந்த படவேடு ரேணுகா தேவி அம்மன் குடி கொண்டிருக்கும் தொகுதி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும், 57,004 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 4,81,495 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,80,004 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 2,03,252 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 3,58,215 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 4,07,252 விவசாயிகளுக்கு றிவி ரிவீsணீஸீ நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் என இதுவரை 30,000 ரூபாய், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட முத்ரா கடன் உதவி 4,168 கோடி ரூபாய் என மத்திய அரசின் நலத்திட்டங்கள் பல லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது.
தமிழகத்தில், பல அரசுப் பள்ளிகளில், வகுப்பறைகள் குறைவாக இருப்பதால், வகுப்புகள் மரத்தடிகளிலும், மேற்கூரை இல்லாத வெட்டவெளிகளிலும், ஆய்வுக் கூடங்களிலும் நடக்கிறது என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட நந்தவாடியில் அமைந்திருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில், தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைகள் உடைந்து விழுந்து மழை நேரத்தில் வகுப்பறைக்குள் தண்ணீர் விழுகிறது. அதனால் பக்கத்தில் உள்ள வராண்டாவில் தான் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது என்று பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த பிஎம் ஸ்ரீ என்ற திட்டத்தின் மூலம், இந்தியாவில் 14,500 பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 18,128 கோடி ரூபாய் நமது மத்திய அரசு செலவு செய்யவுள்ளது. உலகத்தரம் வாய்ந்த அரசு பள்ளிகளை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். ஆந்திர பிரதேச மாநிலத்தில் 662 பள்ளிகள், கர்நாடகா மாநிலத்தில் 129 பள்ளிகள், தெலங்கானா மாநிலத்தில் 543 பள்ளிகள் என அண்டை மா நிலங்கள் அனைத்தும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தும்போது, தமிழக அரசு இந்தத் திட்டத்தையே புறக்கணிக்கிறது. நமது குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பற்றியோ, எதிர்காலம் குறித்தோ திமுகவுக்கு அக்கறை இல்லை. மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தில் அரசியல் செய்துகொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலுவின் அருணை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வந்து, அருணை மருத்துவ கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ. வேலு பணம் சம்பாதிக்க, திமுக கூட்டங்களுக்கு செலவு செய்ய, தேர்தலின் போது மக்களுக்கு காசு கொடுக்க, புதிதாக ஒரு மருத்துவ கல்லூரியை திறந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் ஆகிறது, பிரதமர் கொடுத்த மருத்துவ கல்லூரிகளுக்கு ரிப்பன் வெட்டியதை தாண்டி மு.க.ஸ்டாலின் புதியதாக ஒரு அரசு மருத்துவ கல்லூரியை கட்ட எந்த நடவடிக்கையாவது எடுத்தாரா?
திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கள் நிலங்களைக் காப்பாற்றப் போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்த திமுக, பாஜக மற்றும் விவசாயிகள் போராட்டத்துக்குப் பிறகு குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது. ஆனால் அமைச்சர் எ.வ.வேலு, விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு போட்டது தெரியாது என்கிறார். திருவண்ணாமலையில் எங்கெங்கு சொத்துக்கள் விலைக்கு வருகிறது என்பது மட்டும் அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தெரியும்.
வரும் பாராளுமன்றத் தேர்தல், நாட்டின் வளர்ச்சி தொடர்வதற்கான தேர்தல், நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கான தேர்தல். எளிய மக்களுக்கான அரசியலை, ஊழலற்ற, நேர்மையான அரசியலை முன்னெடுத்துச் செல்லும் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்துவோம். தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். திமுகவின் குடும்ப அரசியலை, ஊழல் அரசியலைப் புறக்கணிப்போம். இவ்வாறு தலைவர் கூறியுள்ளார்.