திமுகவின் ஏ.டி.எம்.மாக அமைச்சர் எ.வ.வேலு உள்ளார் என திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று (ஜனவரி 30) நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பயணத்தில் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் தலைவர் பேசியதாவது:
அகத்திய முனிவர் வழிபட்ட, ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில், பொதுமக்கள் உற்சாக வரவேற்புடன் தொடங்கியுள்ளது. சங்க இலக்கியங்களில் மூவேந்தர்களுக்கு இணையாக போற்றப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான திருக்கோவிலூர் மலையமான் நெடுமுடிக்காரியின் தலைநகரமாக இந்த தொகுதிக்குட்பட்ட வேட்டவலம் இருந்த வீரம் செறிந்த மண். கடந்த 2022ஆம் ஆண்டு, 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பாய்கள், இந்தியா முழுவதும் விற்பனையாகின்றன. நெல் 3,000 ஏக்கரிலும், நிலக்கடலை 5,000 ஏக்கரிலும் சாகுபடி ஆகும் விவசாய பூமி.
திருவண்ணாமலை மாவட்டத்தில், 57,004 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 4,81,495 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,80,004 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 2,03,252 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 3,58,215 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, வழங்கப்பட்டுள்ளது. 4,07,252 விவசாயிகளுக்கு, பிஎம் கிசான் நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் என இதுவரை 30,000 ரூபாய், முத்ரா கடனுதவி 4,168 கோடி ரூபாய் என மத்திய அரசின் திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பலனடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலுவின் அருணை மருத்துவக் கல்லூரி கட்டிடங்களைத் திறக்க இரண்டு முறை வந்த முதலமைச்சர், மாவட்டத்திற்கு எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலு பணம் சம்பாதிக்க, திமுக கூட்டங்களுக்கு செலவு செய்ய, தேர்தலின் போது மக்களுக்கு காசு கொடுக்க, புதிதாக ஒரு மருத்துவ கல்லூரியை திறந்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் ஆகிறது, பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொடுத்த மருத்துவ கல்லூரிகளுக்கு ரிப்பன் வெட்டியதைத் தவிர, புதியதாக ஒரு அரசு மருத்துவ கல்லூரியைக் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுகவின் ஏடிஎம் எ.வ. வேலு. கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அவரது குடும்பத்தாரின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு மொத்தம் 5,442.39 கோடி ரூபாய். வாக்களித்த மக்களுக்கோ இத்தனை ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை.
தமிழகத்தில் 1.5 லட்ச சத்துணவு பணியாளர்கள் இருக்கவேண்டும். ஆனால் தமிழகத்தில் இன்றைய தேதியில் 59,000 சத்துணவு பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் நமது மத்திய அரசு தமிழகத்தில் காலை மற்றும் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த வழங்கியுள்ள நிதி 2,907 கோடி ரூபாய். தமிழகப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்த கடந்த 9 ஆண்டுகளில் நமது மத்திய அரசு வழங்கிய நிதி 12,967 கோடி ரூபாய். மத்திய அரசு வழங்கும் நிதி எங்கே போகிறது? அமைச்சர்கள் சொந்தமாக கல்விக்கூடங்கள் நடத்தினால், அரசு கல்விக்கூடங்களை யார் கவனிப்பார்?
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக தங்கள் விளைநிலங்களை காக்க போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் நடவடிக்கையை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரை, வேளாண்துறையின் இயக்குனராக ஆக்கியுள்ளது திமுக. விவசாயி மீது குண்டாஸ் போட்டவர் இன்று விவசாயத்துறை இயக்குனர். சமீபத்தில் இப்படி தான் பொய் செய்திகள் பரப்பும் ஒருவருக்கு, சமூக நல்லிணக்கத்திற்கான விருது கொடுத்தது திமுக அரசு.
டாஸ்மாக் கடைகளில் வரும் வருமானத்தை நம்பித்தான் திமுக அரசு இருக்கிறது. திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளிலிருந்து 44% சாராயம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால், மக்கள் பாதிப்படைவது குறித்து திமுகவுக்கு அக்கறை இல்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, விவசாயிகள் பலனடையும்படி கள்ளுக்கடைகள் திறக்கப்படும்.
பத்து நாட்களுக்கு முன்பாகத்தான், தமிழகத்தில் முதலீட்டாளர் மாநாடு என்று ஒன்று நடத்தினார்கள். பல ஆயிரம் கோடி முதலீடை ஈர்த்துள்ளதாகக் கூறினார் முதலமைச்சர். பத்து நாட்களில் மறுபடியும் முதலீடு ஈர்க்கப் போகிறோம் என்று ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றிருக்கிறார். முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் துபாய்க்குச் சென்றபோது, அவருடைய குடும்ப ஆடிட்டர் எதற்கு உடன் சென்றார் என்ற கேள்விக்கே இன்னும் பதில் சொல்லவில்லை.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் வாழ்வு மேலும் மேம்பட, ஊழலற்ற நல்லாட்சி அமைய, குடும்ப அரசியலுக்கு விடைகொடுக்க, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் மட்டுமே முடியும் என்பதைத் தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இம்முறை தமிழகத்தில் பாஜக சார்பில் எந்த வேட்பாளர் நின்றாலும், நமது பிரதமர் மோடி அவர்களே போட்டியிடுவதாகக் கருதி, மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்பது உறுதி. தமிழகம் இம்முறை மோடியுடன். இவ்வாறு தலைவர் கூறியுள்ளார்.