கோவையில் வீடு தேடி வரும் பா.ஜ.க.,வின் ஐ.டி., குழு: பொதுமக்கள் வரவேற்பு!

கோவை மாவட்டத்தில் வீடு தேடி சென்று மத்திய அரசுத் திட்டங்களில் பொதுமக்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஈடுபட்டுள்ளது.

கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் 90 தகவல் தொழில்நுட்ப குழுக்கள் களமிறங்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான முதற்கட்டப்பணிகளை ஆறு மாதங்களுக்கு முன்பே துவங்கப்பட்டுள்ளது.

ஒரு சட்டசபைக்கு 15 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஐ.ஐ.டி.,யில் படித்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் தலைமையில் 30 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வார்டுதோறும் சேகரித்த வாக்காளர்களை பற்றி புள்ளி விபரங்களை வைத்து, கூடுதல் தகவல்களை சேகரிக்கின்றனர்.

உதாரணமாக ஒரு தெருவில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை அதில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையை அறிந்து அவர்களின் பின்னணி மற்றும் நடுநிலையாளர்களா, அரசியல் கட்சியின் ஆதரவாளர்களா, அமைப்புகளை சேர்ந்தவர்களா என்பது குறித்து தெரிந்து கொள்கின்றனர்.

மத்திய அரசால் பயனடைந்த 15 லட்சம் பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றவரா? எந்த மதம், ஜாதியை சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்த தகவல்களின் அடிப்படையில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஒரு கோப்பு கொடுக்கின்றனர்.

அந்த கோப்புகளில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் வீடு வீடாக சென்று அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் பா.ஜ.க.,வினர் இறங்கியுள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கூறியதாவது:

வரும் நாடாளுமன்ற தேர்தல் பணி மேற்கொள்ள 90 ஐ.டி., வல்லுனர் குழுவை கட்சி தலைமை அனுப்பியுள்ளது. இக்குழுவினர் பணிகளை துவக்கி விட்டனர். அவர்கள் கொடுக்கும் தகவலின் படியும் கட்சி மேலிடம் சொல்லும் அறிவுறுத்தலின் படியும் பணி மேற்கொண்டு வருகிறோம்.

அவர்கள் அளிக்கும் தகவல்களை எடுத்துக்கொண்டுதான் வாக்காளர்களை சந்தித்து வருகிறோம். அவர்களது எதிர்பார்ப்பு என்ன என்பதை முன்னதாக தெரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை என்று நினைத்து வேலை பார்க்கிறோம்.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தவிர்த்து, மற்ற அனைத்து பணிகளையும் மத்திய அரசின் திட்டங்கள் வாயிலாக, அப்போதைக்கு அப்போதே செய்து கொடுக்கிறோம். இவ்வாறு, ரமேஷ் குமார் கூறினார்.

இளம் வாக்காளர்களுக்கு உதவி:

இளம் வாக்காளர்கள் கல்வி பயில கடனுதவி, தொழில் துவங்க ஸ்டார்ட்அப், சுயதொழில் மேற் கொள்ள, விஷ்வகர்மா யோஜனா திட்டம், மகளிருக்கு முத்ரா திட்டம், குடும்பத்துக்கு பிரதமரின் மருத்துவ காப்பீடு என்று ஒவ்வொரு திட்டத்திலும் இணைக்கின்றனர். இதற்கென கையோடு லேப்டாப் கொண்டு செல்கின்றனர். இப்பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள பா.ஜ.க.,வின் முழுநேர தொண்டர்கள் இருபது பேருக்கு மோட்டார் பைக் வழங்கப்பட்டுள்ளது.

வீடு தேடி வரும் பாஜக ஐடி சேவைகள் பயனுள்ளதாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top