300 தென்னங்கன்றுகளை வெட்டி சாய்த்த திமுக நிர்வாகி! கண்ணீர் விடும் விவசாயி!

தேனி அருகே விவசாயி வளர்த்து வந்த தென்னங்கன்றுகளை திமுக நிர்வாகி தனது குடும்பத்தாருடன் வெட்டி சாய்த்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள குமணன்தொழு பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவருக்கு செல்வம், சின்னசெல்வம் என இரண்டு மகன்கள் உள்ளனர். இக்குடும்பத்திற்கு சொந்தமாக ஒரு ஏக்கர் 75 சென்ட் பட்டா நிலமும், அதை ஒட்டி 80 சென்ட் அளவில் புறம்போக்கு நிலமும் இருந்துள்ளது. கடந்த 3 தலைமுறையாக இங்கே அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், குமணன்தொழு ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த அமுதா என்பவர் இரண்டு வார்டுகளுக்கு உறுப்பினராக உள்ளார். அமுதா மற்றும் அவரது கணவர் செல்வம், அவரது உறவினர்கள் என 20க்கும் மேற்பட்டோர் முத்துவின் நிலத்தில் நடவு செய்யப்பட்டிருந்த 300 தென்னங்கன்றுகள் மற்றும் இலவ மரங்கள், மாட்டுத்தீவனப் பயிர் உள்ளிட்டவையை கடந்த டிசம்பர் மாதம் வெட்டி வீசியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட முத்துவின் மகன் செல்வம் மயிலாடும்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரை எடுக்காமல் காவல்துறை அலட்சியப்படுத்தி வந்துள்ளது. மாறாக தென்னங்கன்றுகளை வெட்டி வீசிய திமுக ஊராட்சி மன்ற உறுப்பினர் அமுதாவின் கணவர், செல்வம் கொடுத்த புகாரை மட்டும் போலீசார் பெற்றுள்ளனர்.

இதன் பின்னர் முத்து அவருடைய மகன்கள் செல்வம் மற்றும் சின்னசெல்வம் ஆகிய 3 பேரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு தரப்பினருக்கு ஆதரவாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எதிர்தரப்பினர் கொடுத்த புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் நீதிபதி உத்தரவிட்டும், மயிலாடும்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். மீண்டும் பாதிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்த நீதிபதி, தேனி மாவட்ட எஸ்.பி., உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top