திருச்சி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் திமுக சார்பில் நடைபெற்ற வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கூடியதால் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் துன்பத்திற்கு ஆளாகினர்.
இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், அதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தால் அரசின் திட்டங்கள் மற்றும் கட்சி சார்ந்த எந்த ஒரு நலத்திட்டங்களையும் வழங்கக்கூடாது என்பது விதி.
இந்த நிலையில், திருச்சியில் திமுக சார்பில் கடந்த சில நாட்களாக கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 01 அன்று ஒத்தக்கடை, தில்லை நகர், மிளகுபாறை, பொன்னகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களை ஒன்றாக திரட்டியிருந்தனர் திமுகவினர். அதில் அமைச்சர் நேரு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்காக சாலையில் போக்குவரத்து இடையூறு செய்யும் வகையில் மிகப்பெரிய பேனர்களை திமுகவினர் வைத்திருந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அதிலும் வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி கருமண்டபம் பொன்னகர் பகுதியில் உள்ள மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் பந்தல் அமைத்து, ஒலிபெருக்கி மூலம் கட்சி பாடல்கள் போடப்பட்டு இருந்தது.
அரசியல்வாதிகளின் சொகுசு கார்களையும், வந்திருந்த மக்கள் கூட்டத்தை மிரட்சியுடன் கடந்து பள்ளிக்கு சென்றனர் சிறுவர்கள். பள்ளி சிறுவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடத்திய திமுகவிற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆட்சி வந்தாலே ஓவராக ஆட்டம் போடுவது திமுகவிற்கு ஒன்றும் புதிதல்ல என்றபடியே கடந்து சென்றனர் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும்.