6151 பணியிடங்களை நிரப்புவதற்கு 2022ஆம் ஆண்டு தேர்வு நடத்தியவர்கள், 20 மாதங்களுக்கு பிறகு இப்போது 161 பேருக்கு மட்டும் பணி ஆணை கொடுப்பார்களாம் என தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் யாத்திரை நேற்று (பிப்ரவரி 04) திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
1500 வருடங்கள் பழமையான லட்சுமி நரசிம்மர் அருளும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் பெரும் திரளாகக் கூடி, உற்சாகத்துடன் அளித்த ஆதரவால் சிறப்புற்றது. போளூர் சட்டமன்றத் தொகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். இங்கு நெய்யப்படும் வேட்டி மற்றும் லுங்கிகள் மிகவும் பிரசித்தி. இவை அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றன. இங்குள்ள மொடையூர் பகுதியில், 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிற்பக் கலைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
போளூர் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை அடிவாரத்தில், ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் சாமை உற்பத்தி செய்யப்படுகிறது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்து, சிறுதானியம் உண்பதை ஊக்குவிப்பதோடு சிறுதானிய விவசாயிகளையும் இதன் மூலமாக கௌரவப்படுத்தினார். இதனால் சிறுதானிய உற்பத்தி 35% அதிகரித்துள்ளது. உலகம் முழுக்க நமது நாட்டு சிறுதானியங்கள் சென்றடைகின்றன. நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் விவசாயிகளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் திமுக, யாருக்குமே உதவாத, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறது இது தான் நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம்.
தமிழகத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பங்கு வெறும் 1.9%. தமிழகத்தில் மனித வளர்ச்சி குறியீட்டில் கடைசியிலிருந்து 6 ஆவது மாவட்டமாக திருவண்ணாமலை இருக்கிறது. ஆனால் திருவண்ணாமலை அமைச்சர், திமுகவின் ஏடிஎம்மாக மாறும் அளவுக்குச் சொத்து சம்பாதித்து இருக்கிறார். அத்தனையும் ஊழல் பணம், மக்களின் வரிப்பணம். மத்திய அரசு, மக்களுக்காகச் செலவிட வழங்கிய பணம்.
மத்திய அரசு மக்களுக்குக் கொண்டு வரும் ஒவ்வொரு நலத்திட்டத்திலும் ஊழல் செய்து கொண்டிருக்கிறது திமுக. கடந்த 2020ஆம் ஆண்டு, நமது பிரதமர் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையில், மதிய உணவோடு காலை உணவும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்று நமது மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்ட திமுக, அதை ஒழுங்காக செயல்படுத்துகிறதா? சேத்துப்பட்டு காட்டேரி சமத்துவபுரத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில், ஒரு வாரத்திற்கு முன்பு, காலை உணவு சமைத்த பாத்திரத்தில் ஒரு பல்லி இறந்து கிடந்த செய்தி வந்தது. அழுகிய முட்டை, தரமற்ற உணவு என தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டது.
தமிழகத்தில் காலை மற்றும் மத்திய உணவு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளில் 2,907 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. தமிழகத்தின் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்த கடந்த 9 ஆண்டுகளில் நமது மத்திய அரசு வழங்கிய நிதி 12,967 கோடி ரூபாய். ஆனால், தமிழகப் பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை, கட்டிடங்கள் இல்லை. வெட்டவெளியிலும், மரத்தடியிலும் வகுப்புகள் நடக்கின்றன. மத்திய அரசு வழங்கும் நிதி எங்கே போகிறது?
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்க, நமது பிரதமர் கொண்டு வந்த ஜல்ஜீவன் திட்டத்திலும் ஊழல் நடந்திருக்கிறது. வீட்டில் இருக்கும் தண்ணீர் குழாய்க்கும், தண்ணீர் தொட்டிக்கும் இணைப்பே கொடுக்காமல், திட்டத்தை நிறைவேற்றி விட்டதாகப் பணத்தை திருடியிருக்கின்றனர். இந்த விஷயத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்ட முரளி கிருஷ்ணா என்ற இளைஞரைக் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் முதல் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் வரை அனைவரும் முயற்சித்தனர். ஜல் ஜீவன் திட்டத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக நமது மாண்புமிகு ஆளுநரிடம் ஒரு புகாரை தமிழக பாஜக 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாண்புமிகு ஆளுநரை சந்தித்து புகார் மனு வழங்கியுள்ளது.
அந்த இளைஞரைக் கைது செய்ய வலியுறுத்திய மாவட்ட ஆட்சியர்தான், அமைச்சர் எ.வ.வேலு சொன்னதால், விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டத்தில் வழக்கு தொடர்ந்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ். விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போட்டதற்குப் பரிசாக அவரை வேளாண்துறை இயக்குனராகப் பதவி உயர்வு கொடுத்திருக்கிறது திமுக அரசு.
அரசுப் பணிகளுக்கான குரூப் தேர்வுகள் எழுதி, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தேர்தல் வருவதையொட்டி, நேர்முகத் தேர்வு நடைபெறப் போவதாக அறிவித்துள்ளது திமுக அரசு. 6151 பணியிடங்களை நிரப்புவதற்கு 2022ஆம் ஆண்டு தேர்வு நடத்தியவர்கள், 20 மாதங்களுக்கு பிறகு இப்போது 161 பேருக்கு மட்டும் பணி ஆணை கொடுப்பார்களாம். இது ஏமாற்று வேலை. தமிழகத்தில் கடந்த 33 மாதங்களில் 31 லட்ச இளைஞர்கள் TNPSC தேர்வு எழுதியுள்ளார்கள். அவர்களில் 10,321 பேருக்கு மட்டுமே இதுவரை வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபின் Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner (Commercial Taxes), Deputy Registrar of Cooperative Societies, Assistant Director of Rural Development, and District Employment Officer ஆகிய பணியிடங்களுக்கு ஒருவரைக் கூட புதிதாக நியமிக்கவில்லை.
தமிழகத்திலும் நேர்மையான, ஊழலற்ற, அனைவருக்குமான அரசியல் மாற்றம் உருவாக நம் அனைவருக்குமான வாய்ப்பு, வரும் பாராளுமன்றத் தேர்தல். ஆண்டாண்டு காலமாக மக்களைச் சுரண்டி வரும் திராவிடக் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நமது குழந்தைகள் எதிர்காலத்துக்காக, இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக, தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான சமமான வளர்ச்சிக்காக, உண்மையான சமூக நீதிக்காக, பாஜகவை ஆதரிக்க வேண்டும். அதற்கு முதற்படியாக, வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும், தேசிய ஜன நாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.