ராமர் கோவில், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம், அரபு நாடுகளில் எல்லாம் நீக்கப்பட்ட தலாக் முறையை ஒழித்து, இஸ்லாமியச் சகோதரிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு கொடுத்தது என, 60 ஆண்டுகளாகத் தீர்க்காமல் வைத்திருந்த சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு கண்டவர் பிரதமர் நரேந்திர மோடி என, பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் நேற்று (பிப்ரவரி 09) நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் தலைவர் அண்ணாமலை பேசினார்.
பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றியதாவது:
சிரமங்களில் இருந்து நம்மை காப்பாற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியன் கோவில் அமைந்திருக்கும் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் பேரன்புடனும் ஆதரவுடனும் வெகு சிறப்பாக நடைபெற்றது. வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் வரதராஜ பெருமாள் கோவில், பழவேற்காடு ஏரி என சிறப்பு வாய்ந்த தொகுதி பொன்னேரி.
கடந்த 2004 – 2014, திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கீடு 32% மட்டுமே. இன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பாஜக ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரிப் பங்கீடு 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2004 – 2014 காலகட்டத்தில், திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழகத்துக்கு வழங்கிய வரிப் பங்கீடு ரூ. 94,977 கோடி மட்டுமே. 2014 முதல் 2024 வரையிலான பத்து ஆண்டுகளில், பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வழங்கிய வரி பங்கீடு ரூ.2,77,444 கோடி. 192% அதிகமாக தற்போது வழங்கப்பட்டுள்ளது. 2004 – 2014 வரை தமிழகத்துக்கு வழங்கிய உதவித்தொகை ரூ. 57,924.42 கோடி மட்டுமே. 2014 – 2023 வரையிலான ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்துக்கு வழங்கிய உதவித்தொகை, 2,30,893 கோடி. 300% அதிகமாக தற்போது வழங்கப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி, ரூ.6,412.15 கோடி தமிழக உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாக் கடன் உதவியாக நமது மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், தமிழகத்திற்கான திட்டங்கள், உதவித் தொகை மற்றும் நிதி பங்கீட்டின் மதிப்பு, ரூ.10.76 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். தமிழகத்தின் நேரடி வரிப் பங்களிப்பான 5.16 லட்சம் கோடியை விட இரண்டு மடங்கு அதிகமாக நமது பிரதமர் மோடி அரசு திரும்பிக் கொடுத்துள்ளது. இதன் விவரங்களை வெள்ளை அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளது. திமுகவின் பொய்களை இனியும் நம்பி ஏமாற மக்கள் தயாராக இல்லை.
நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம், மீனவர் நலன் காக்க தனி அமைச்சகம், ரூ.28 லட்சம் கோடி முத்ரா கடனுதவி, 7 கோடி மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு, ரூ.7.2 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி, Make in India திட்டத்தின் மூலமாக இந்தியாவை நோக்கி உலக நாடுகளை வரச்செய்தது, கடந்த 9 ஆண்டுகளில் 25 கோடி மக்களை, ஏழ்மை நிலையிலிருந்து வெளிவரச் செய்தது என, நமது பிரதமர் செய்த சாதனைகள் ஏராளம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு உலகில் 11 ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய நாடாக உருவாக இன்னும் 30 ஆண்டுகள், அதாவது 2044 ஆம் ஆண்டு வரை தேவைப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியது. ஆனால் பாஜக ஆட்சியில், ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவை ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றியிருக்கிறோம். வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்ற அடுத்த நான்கு ஆண்டுகளில், அதாவது 2028 ஆம் ஆண்டில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கும். காங்கிரஸ் கட்சி முப்பது ஆண்டுகளில் வைத்த இலக்கை, பாஜக ஆட்சியில், நமது நாடு 14 ஆண்டுகளில் அடையப் போகிறது.
நமது பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கொடுத்த 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார். ராமர் கோவில், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம், அரபு நாடுகளில் எல்லாம் நீக்கப்பட்ட தலாக் முறையை ஒழித்து, இஸ்லாமியச் சகோதரிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு கொடுத்தது என, 60 ஆண்டுகளாகத் தீர்க்காமல் வைத்திருந்த சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு கண்டுள்ளார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400 க்கும் அதிகமான இடங்கள் பெற்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த, ஊழல், குடும்ப அரசியல் கட்சிகளைப் புறக்கணித்து, தமிழகம் முழுவதும் இம்முறை துணை நிற்பதும் உறுதி. இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.