காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் அசோக் சவான், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பிடிக்காமல் தலைவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த மாதம் முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்தார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சராக இருந்த பாபா சித்திக்கும் விலகினார்.
இதையடுத்து மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், போகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். இதனைதொடர்ந்து தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் ராகுல் நர்வேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்தார்.
இது குறித்து அசோக் சவான் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‘‘நான் இன்று மும்பையில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் சென்று அக்கட்சியுடன் இணைகிறேன். இன்று எனது அரசியல் வாழ்க்கையின் புதிய ஆரம்பம். மேலும் பா.ஜ.க.வில் நான் இணையும்போது என்னுடன் மராட்டிய மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேவேந்திரா பட்னாவிஸ், மும்பை பா.ஜ.க. தலைவர் ஆஷிஷ் ஷெலர் உட்பட பலர் இருப்பார்கள்.’’ என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், மும்பையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்த அசோக் சவான் பா.ஜ.க.வுடன் தன்னை இணைத்து கொண்டார். மேலும் இவருடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. அமர் ராஜூர்கரும் பா.ஜ.க.வில் இணைந்தார்.