மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க நிர்வாகி சக்திவேல், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு மாவட்ட செயலாளராக சக்திவேல் பணியாற்றி வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர், மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் குறிஞ்சி நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இன்று (பிப்ரவரி 15) காலை 6 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டில் இருந்து, வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள சங்குநகர் பகுதியில் உள்ள குடோனுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை இரண்டு பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சக்திவேலை வழி மறித்து, பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து சக்திவேல் தப்பியோட முயன்றார். ஆனாலும், அவரை விடாமல் துரத்திச்சென்று பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். பின்னர், கொலையாளிகள் மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டனர்.
இதில், அதே இடத்தில் சக்திவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இது தொடர்பாக பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அண்ணாநகர் காவல்துறையினர் சக்திவேலின் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் பா.ஜ.க நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என பா.ஜ.க., தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.