தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, வழக்கறிஞர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும் என தலைவர் அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.
சென்னையில், நேற்று (பிப்ரவரி 16) வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியதாவது:
தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர், வழக்கறிஞர் அண்ணன் பால் கனகராஜ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நீதி தேவதையின் மனசாட்சியாக, தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதும், தவறு செய்யாத நிரபராதிகளை மீட்டெடுப்பதுமான ,புனிதமான பணிகளை மேற்கொண்டு வரும் வழக்கறிஞர் பெருமக்கள் அனைவரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி.
பாஜக யாத்திரைகளால் வளர்ந்த கட்சி. இந்தியா முழுவதுமே ரத யாத்திரை, பாத யாத்திரை, தேசிய ஒருமைப்பாடு யாத்திரை என, பல்வேறு தரப்பு மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை அறிந்து, அவற்றை ஒவ்வொன்றாகப் பூர்த்தி செய்து வருவதால், 1984 ஆம் ஆண்டு, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களோடு தொடங்கிய பயணம், இன்று 303 பாராளுமன்ற உறுப்பினர்களோடு இரண்டாவது முறையாக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறோம்.
தமிழகத்தில் கடந்த ஜூலை 28 அன்று தொடங்கிய என் மண் என் மக்கள் பயணத்தில், கடந்த 6 மாதங்களில், 200 சட்டமன்றத் தொகுதிகளில் பயணித்து, 130 தனித்தனியான சந்திப்புகளையும் நடத்தியிருக்கிறோம். புதியவற்றைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். தமிழக மேம்பாட்டுக்கான விஷயங்களை மத்திய அரசுக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்று முக்கியத் தூண்களில் நீதித் துறை முக்கியமான தூண். அரசியல் சார்பின்றி, சுயவிருப்பு வெறுப்பின்றி, ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் துறையான நீதித் துறையில், நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக, வாத பிரதிவாதங்களை எடுத்து வைத்து வழி நடத்துவது வழக்கறிஞர்களின் முக்கியமான பணி. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஒருமுறை, நீதி கிடைப்பது மக்களுக்குத் தெரிய வேண்டும், அப்போதுதான், நாட்டு மக்களுக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மரியாதை வரும் என்று கூறினார். ஜவ்வாது மலை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி ஸ்ரீபதி அவர்கள், தமிழகத்தின் முதல் பழங்குடியின நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மணிப்பூரில், முதல் பழங்குடியின நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார். தற்போது மக்கள் நம்பிக்கையை பெறும் அளவிற்கு நீதித் துறை இருக்கிறது.
நமது நீண்ட நாள் கோரிக்கையான, நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்பதற்கு, கடந்த ஏப்ரல் 30, 2022 அன்று நமது பிரதமர் பிள்ளையார் சுழி இட்டுள்ளார். இந்திய அளவில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், நீதிபதிகள் அமர்ந்திருந்த மேடையில், வழக்காடு மொழியை, அந்தந்த மாநில மொழிகளில் கொண்டு வர வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது, அப்போதுதான் நீதித் துறை முழுமை பெறும் என்று கூறினார் நமது பிரதமர். விரைவில் தமிழகத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கடந்த ஜனவரி 2023 குடியரசு தினத்தன்று நமது பிரதமர் உரையாற்றியபோது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா எனும் நான்கு மொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படுகின்றன என்பதற்குப் பாராட்டுக்களை தெரிவித்தார். இன்று, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, 16 மொழிகளில் வெளியிடப்படுகின்றன. நீதித் துறையின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றவும், மாநிலங்களின் மொழி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றவும், மத்திய அரசு முழுமூச்சாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு, பிரதமர் ஆட்சிக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 906 ஆக இருந்தது. இன்று அது 1,114 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் அதிகமாக நீதிபதிகள் இடம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இடங்கள், தகுதியான, திறமையான, இதுவரை வாய்ப்புகள் கிடைக்காத சமூக மக்களுக்கு, சமூக நீதியின் அடிப்படையில் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளை எல்லாம் விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க, நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை எல்லாம் விரைவாக முடிக்க, கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
நமது நீதித் துறையில் உள்ள சட்டங்கள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்திய சட்டங்கள். காலனி ஆதிக்கத்தில் உருவாக்கப்பட்டவை. அவற்றில் தற்போதைய சமூகத்துக்குப் பயனில்லாத, நமது நாட்டிற்குப் பொருந்தாத 1,824 சட்டங்களை நீக்கியிருக்கிறோம். இந்திய மோட்டார் வாகனச் சட்டம், தபால் துறை சட்டம், விவசாயப் பொருள்கள் சட்டம், குற்றவியல் மற்றும் தண்டனைச் சட்டங்கள் என பல்வேறு சட்டங்களில், நமது நாட்டிற்குத் தற்போது பொருத்தமாக இருக்கும்படியான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம்.
இந்தியாவின் கல்விமுறையை எழுதிய மெக்காலே தான், இந்திய தண்டனைச் சட்டத்தையும் எழுதியிருக்கிறார். 1860 ஆம் ஆண்டு வந்த இந்தச் சட்டங்கள், தண்டனைச் சட்டங்களாகவே இருக்கின்றனவே தவிர, குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கான சட்டங்களாக இல்லை, எனவே இந்தச் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இன்று நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள், 177 பிரிவுகளை நீக்கி, 9 புதிய பிரிவுகளை கொண்டு வந்து, 14 பிரிவுகளில் மாற்றம் செய்து, சிறிய குற்றங்களுக்கு, வெளிநாடுகளில் இருப்பதைப் போல சமூக சேவை செய்ய வேண்டும் என்று சட்டத் திருத்தம் செய்து, மேலும் சட்டத் துறையில் தொழில் நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்படி சீர்திருத்தங்களை செய்துள்ளார். பாரதிய நியாய சங்ஹிதா சட்டம், பாரதிய நாகரிக சுரக்ஷா சங்கீதா சட்டம், பாரதிய சாட்சி சட்டம் இவை மூன்றும் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டவை.
நமது மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு சீர்திருத்தங்களுக்கும் எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை ஒரு கூட்டம் வேலையாக வைத்திருக்கிறது. குறிப்பாக, மத்திய அரசின் மீது ரபேல் ஊழல் என்ற பொய்யான ஊழல் குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர நேர்ந்தது. இதே போல, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கிலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை, கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டையும், தீவிரவாதிகளுக்கு வழங்கப்படும் நிதியையும் ஒழிக்கும் நேர்மையான நடவடிக்கை என்றே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பெகசஸ் ஒட்டுக் கேட்பு வழக்கிலும், தங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியவர்கள் தொலைபேசிகளைச் சோதனை செய்து, அதுவும் பொய்யான குற்றச்சாட்டு என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. குஜராத் கலவரம், புதிய பாராளுமன்றக் கட்டிடம், பிஎம் கேர் திட்டம், ஆர்டிகிள் 370 என, பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் எதிரான ஒவ்வொரு வழக்கிலும், வழக்கு தொடர்ந்தவர்கள் உள்நோக்கம் என்ன என்பதை உச்சநீதிமன்றம் உணர்ந்து தீர்ப்பளித்திருக்கிறது. தற்போதைய உச்சநீதிமன்றம் இன்று இந்தியாவின் வளர்ச்சிக்குத் துணை நிற்கிறது. கொள்கை முடிவான வழக்குகளில் விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்கிறது.
எனவே நமது நாடு தற்போது விரைவான வளர்ச்சியைப் பெற முடிகிறது. உலகப் பொருளாதாரத்தில் 11 ஆம் இடத்தில் இருந்து 5 ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறோம். வரும் 2028 ஆம் ஆண்டில், 3 ஆவது இடத்தை நிச்சயம் பிடிப்போம். இந்த முன்னேற்றத்தில் அனைவரின் வேலைப்பளுவையும் உணர்ந்திருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் சிறிய வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதைக் கண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, வழக்கறிஞர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும். வழக்கறிஞர் சேம நிதி மற்றும் நல நிதிகள் உயர்த்தப்படும். இவை அனைத்தும் முடிவெடுக்க வேண்டியது மாநில அரசுகளே. வழக்கறிஞர் உதவி நிதி, வயது விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தப்படும். 2026 ஆம் ஆண்டுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில் இது இடம்பெறும். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டமும் விரைவில் கொண்டு வர, பாஜக வழக்கறிஞர்களுடன் துணையிருக்கும்.
வரும் பாராளுமன்றத் தேர்தல், வளர்ச்சிக்கான தேர்தல். நமது நாட்டின் வளர்ச்சி இன்னும் பல மடங்கு அதிகமாக, வேகமாக, நுணுக்கமாக உயர, நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 400 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு இம்முறை, தமிழகமும் துணையிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.