பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த பாஜக தேசிய பொதுக் குழு கூட்டத்தில் அவர் கூறியிருப்பதாவது:
முந்தைய அரசுகளை விட விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதிக திட்டங்களை தீட்டியுள்ளது.
உலகம் முழுவதும் ஒரு மூட்டை யூரியா ரூ.3000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டில் ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2014-க்கு முன் விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25,000 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது ரூ.1,25,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று, இந்தியாவின் விவசாய ஏற்றுமதி 4 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. நான் முன்பு விவசாய அமைச்சராக நாட்டிற்கு சேவை செய்தேன், மத்திய ஆட்சியில் இருந்த அனைத்து ஆட்சிகளையும் விட, விவசாயிகளுக்கு எங்கள் அரசு அதிகம் செய்துள்ளது என்று முழு நம்பிக்கையுடன் கூற முடியும்.
மத்திய அரசின் ‘நேரடி பயன் பரிமாற்றத் திட்டத்தின்’ கீழ், 3 லட்சம் கோடி ரூபாய் தவறானவர்களின் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட்டதாக அவர் கூறினார்.
எங்கள் அரசாங்கம் ,பணத்தை நேரடிப் பலன் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளியின் கணக்கிற்கும் மாற்றுவதற்கு அயராமல் பாடுபட்டது. இதன் விளைவாக ரூ. 3 லட்சம் கோடி பொதுப் பணம், தவறானவர்கள் கைகளில் சிக்காமல் சேமிக்கப்பட்டது.
2014 இல் இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 300-500க்குள் மட்டுமே இருந்தது. இன்று அதன் எண்ணிக்கை 1,20,000 ஆக உயர்ந்துள்ளது. மொபைல் உற்பத்தியும் கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் மூலதனச் செலவு ஐந்து மடங்கு உயர்ந்து 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று ராஜ்நாத் கூறினார்.
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 25,000 க்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் ,1300 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.