சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல், மார்ச் 4ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு.
திமுக அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சிறையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து அவர் நீடித்து வந்த நிலையில், ஜாமினுக்காக சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 21 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (பிப்ரவரி 20) நிறைவு பெற்றதை முன்னிட்டு புழல் சிறையில் இருந்து மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் மார்ச் 4ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.