தமிழகத்தில் எந்த ஒரு அரசுத் துறையை எடுத்துக் கொண்டாலும், ஊழலும், குடும்ப அரசியலும் அந்தத் துறையையே சீரழித்து விட்டன என, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘என் மண், என் மக்கள்’, நடைபயணத்தில் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இன்று (பிப்ரவரி 20) மதியம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபயணம் சென்ற தலைவர் அண்ணாமலைக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் தலைவர் பேசியதாவது:
அருள்மிகு கந்தசாமி பெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, பெரும் திரளாகக் கூடி ஆதரவளித்த பொதுமக்கள் அன்பினால் சிறந்தது.
முருகப்பெருமான், நிலம், கடல், ஆகாயம் ஆகிய மூன்றிலும், சூரபத்மனை வெற்றிகொண்டார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் நின்றும், திருச்செந்தூரில் கடலில் நின்றும் போரிட்ட முருகப்பெருமான், அசுரர்களின் ஆணவத்தை ஆகாயத்தில் நின்று அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும். அதே போல, ஊழல் அசுரனை அழிக்கும் யாத்திரையாக, என் மண் என் மக்கள் யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. குஜராத், டெல்லி, பீகார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜகதான் வெற்றி பெறும். அங்குள்ள மக்கள், வளர்ச்சியைக் கண்முன்னே பார்க்கிறார்கள். தொடர்ந்து வளர்ச்சிக்காக வாக்களிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில், 2014 – 2024 பத்து ஆண்டுகளில் மாற்றி மாற்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்காளிக் கட்சிகள், தங்கள் தொகுதிக்காகப் பாராளுமன்றத்தில் பேசியது கூடக் கிடையாது. பங்காளிக் கட்சிகளைத் தேர்ந்தெடுப்பது வீண்.
தமிழகத்தில் ஒரு அரசுத் துறை கூடநன்றாகச் செயல்படுகிறது என்று சொல்ல முடியாது. கல்வித் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், ஊழலும், குடும்ப அரசியலும் அந்தத் துறையையே சீரழித்து விட்டன. இந்த நிலை தமிழகத்தில் மாற வேண்டும். ஊழலையும், குடும்ப அரசியலையும் மட்டுமே இத்தனை ஆண்டுகளாகச் செய்து வரும் பங்காளிக் கட்சிகள், முழுமையாக அகற்றப்பட வேண்டும்.
தமிழனின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாமல்லபுரம், இந்த திருப்போரூர் தொகுதியில்தான் அமைந்துள்ளது. 1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால சிற்பங்கள், கடற்கரை கோயில், பல்லவர் கால வரலாற்றுச் சிறப்புகள் ஆகியவற்றை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், கடந்த அக்டோபர் 2019 ஆம் ஆண்டு மாமல்லபுரத்திற்கு சீன அதிபரை அழைத்து வந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். தலைநகர் டெல்லிக்கோ, தனது சொந்த மாநிலம் குஜராத்திற்கோ அல்லது தனது சொந்த நாடாளுமன்ற தொகுதி வாரணாசிக்கோ அழைத்துச் செல்லாமல், தமிழனின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவதற்காக, மாமல்லபுரத்தை நமது பிரதமர் தேர்வு செய்தார்.
மாமல்லபுரத்திற்கு, வார இறுதி நாட்களில் சராசரியாக 50,000 பேர் வருவார்கள். நமது பிரதமர் மோடி அவர்கள் வந்து சென்ற அடுத்த வாரம், ஒரே நாளில் 1,50,000 பேர் மாமல்லபுரத்திற்கு வந்து சென்றனர். இன்று நாம் லட்சத்தீவுகள், மாலத்தீவுகள் பற்றிப் பேசுகிறோம். அது போன்ற ஒரு தாக்கத்தை 2019ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் உருவாக்கியவர் மோடி. மாமல்லபுரத்திற்கு ஒரு முறை அல்ல, இரண்டு முறை பெருமை சேர்த்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு G20 நாடுகளின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்ற W 20 சந்திப்பு மாமல்லபுரத்தில் தான் நடந்தது.
மாமல்லபுரத்தைச் சுற்றி கிட்டத்தட்ட 1500 சிற்பிகள் வசிக்கின்றனர். சிற்பக்கலையில் தமிழகம் சிறந்து விளங்க இந்த மாமல்லபுரம் ஒரு காரணம். அயோத்தி ராமர் கோவிலில் பங்கு பெற்ற பெரும்பாலான தச்சர்கள் மற்றும் சிற்பிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான். குறிப்பாக உங்கள் மாமல்லபுரத்தை சேர்ந்தவர்கள் தான். மாமல்லபுரத்தை ஒரு சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றலாம். ஆனால், இங்கு ஒரு பேருந்து நிலையம் அமைக்க கூட தமிழக அரசால் முடியவில்லை. 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதுப் பேருந்து நிலையப் பணிகள் எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது. திராவிட ஆமை மாடல் அரசாக, மெதுவாகச் செயல்படுகிறது இந்த திராவிடக் கட்சிகளின் அரசு.
கட்டப் பஞ்சாயத்து செய்து வசூல் செய்வதற்காகவே, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் தொகுதியில் இருக்கிறார். தேர்தலுக்கு முன்பாக, சட்டம் ஒழுங்கு, காவல்துறை தலைமை இயக்குனர் கையில் இல்லை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கையில் இல்லை, இங்கே இருக்கும் விசிகவினர் கையில் இருக்கிறது என்பது போன்ற பொறுப்பற்ற பேச்சுகளுக்கு பெயர் போன எஸ்எஸ் பாலாஜிதான் அவர். இவரால் தொகுதிக்கோ, மக்களுக்கோ எந்தப் பயனும் இல்லை.
தமிழகத்தின் வளர்ச்சி என்பது கோபாலபுரத்தின் வளர்ச்சி இல்லை. ஏழை மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் வளர்ச்சிதான் நமது வளர்ச்சி. நமது நாட்டின் வளர்ச்சி. ஐந்து ஆண்டுகளில் 3.50 லட்சம் அரசு வேலைகள் வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, உதயநிதியை அமைச்சராக்குவதற்குத்தான் முழு கவனத்தையும் செலுத்தியதே தவிர, வெறும் 10,600 இளைஞர்களுக்குத்தான் 33 மாதங்களில் அரசு வேலை கொடுத்திருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சித்திருக்கிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்போது, இதுவரை அரசு வேலை பெறாத குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதைத் தேர்தல் வாக்குறுதியாகவே அறிவித்து நிறைவேற்றுவோம்.
தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில், பல ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருக்கும் மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்களாக அறிவித்துள்ளது திமுக. புதிய திட்டங்கள் இல்லை. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பல திட்டங்களைப் பெயரளவில் அறிவித்து, நிதி ஒதுக்காமல் ஏமாற்றியிருக்கிறது திமுக.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல, நம் ஊரை, நம் தொகுதியை, நம் மக்களை முன்னேற்றும், நம்பிக்கையான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குடும்ப அரசியல், ஊழல் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் பங்காளிக் கட்சிகள் வேண்டாம். ஊழலற்ற நேர்மையான நல்லாட்சி தொடர, தமிழகமும் இம்முறை துணையிருக்க வேண்டும். தமிழகம் முழுவதும், பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைப்போம். இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.