ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற ,கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அலுவலகம்!

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனது கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அலுவலகம், ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற, தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மக்கள் பிரதிநிதிகள், மக்கள் நலனுக்காக தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.

குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்பது பிரதமரின் தாரக மந்திரம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரின் தலைமையில், கட்சியின் பணி, கலாச்சாரத்தை மேம்படுத்தவும், மிகுந்த அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்யவும் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காகவே நாடு முழுவதும் ,அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுக்கு சொந்தமாக அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

2011-ம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, அவரது அலுவலகம் ஐ.எஸ்.ஓ. சான்றிதழைப் பெற்றது. திறமையான, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதில் அன்றைய முதலமைச்சர் மோடியும், அவரது அலுவலகமும் காட்டிய அர்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரமே இந்த சான்றிதழ். சட்டமன்றக் கடமைகள், தொகுதிப் பிரதிநிதித்துவம், கொள்கை செல்வாக்கு, சமூக ஈடுபாடு, வளர்ச்சிக்கான முயற்சிகள், மேற்பார்வை, நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு அம்சங்களில், எங்கள் தனிச்சிறப்பு வாய்ந்த தர மேலாண்மை அமைப்பை, ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் அங்கீகரிக்கிறது. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு கிடைத்துள்ள ஐ.எஸ்.ஓ. சான்றிதழ், மக்கள் சேவையில் எங்கள் குழுவின் முழுமையான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

கோவை தெற்கு தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, உயர்தர சேவைகளை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். எனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் செயல்பாடுகள், சேவைகளில் சர்வதேச தரத்தை கடைபிடிக்கிறோம். கோவை தெற்கு தொகுதி அலுவலகத்துடனான, அனைத்து தொடர்புகளிலும் மேம்பட்ட செயல்திறன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த சாதனையை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரிடம் நேரில் தெரிவித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top