சுதந்திரமான, பாதுகாப்பான நாடாக இந்தியா விளங்குகிறது. நான் எந்த நாட்டிலும் அடைக்கலம் கோரத் தேவையில்லை. நான் மலாலா கிடையாது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டார் என காஷ்மீரை சேர்ந்த பெண் செய்தியாளர், யானா மிர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசினார்.
ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று, 1994-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தினம் ஜம்மு- காஷ்மீர் சங்கல்ப தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இங்கிலாந்தில் செயல்படும் ஜம்மு-காஷ்மீர் கல்வி மையம் சார்பில் ,அந்த நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த (21.02.2024) அன்று சிறப்பு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து எம்.பி.க்கள் பாப் பிளாக்மேன், தெரசா, எலியட், வீரேந்திர சர்மா மற்றும் இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் 100 பேர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் காஷ்மீரை சேர்ந்த, சமூக ஆர்வலரும் செய்தியாளருமான யானா மிர் பங்கேற்று பேசியதாவது:
எனது தாய் பூமி காஷ்மீர். இது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சுதந்திரமான, பாதுகாப்பான நாடாக இந்தியா விளங்குகிறது. நான் எந்த நாட்டிலும் அடைக்கலம் கோரத் தேவையில்லை. நான் மலாலா கிடையாது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டார்.
இங்கிலாந்து, பாகிஸ்தானில் வசிப்பவர்கள், சிலசர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள் எனது தாய்நாடான இந்தியா குறித்து அவதூறாக விமர்சிக்கின்றனர். பிரிட்டனில் இருந்து கொண்டு இந்தியாவை பற்றி அறிந்து கொள்ள முடியாது. தீவிரவாதத்தால் ஆயிரக்கணக்கான காஷ்மீர் தாய்மார்கள் , தங்கள் மகன்களை இழந்துள்ளனர். உங்களது விஷம கருத்துகளால் பிரிவினையைத் தூண்ட வேண்டாம். காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகின்றனர். ஜெய் ஹிந்த்.
இவ்வாறு அவர் பேசினார்.
யானா மிர் நொய்டாவில் உள்ள பாரத் எக்ஸ்பிரஸ் செய்தி சேனலின், ஸ்ரீநகர் செய்தியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீர் பயங்கரவாதிகளின் கூடாரமாக விளங்கியது.அங்குள்ள இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு , பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டு வந்தனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, அங்குள்ள இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.