பிரதமர் மோடிக்கு வாக்களித்தால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும்: வானூரில் தலைவர் அண்ணாமலை!

பிரதமர் மோடி அவர்களுக்கு வாக்களித்தால், வளர்ச்சி, நல்ல சாலைகள், லஞ்ச லாவண்யம் இல்லாதநேர்மையான அரசு கிடைக்கும் என மயிலம் சட்டமன்றத் தொகுதியில் நேற்று (பிப்ரவரி 25) நடைபெற்ற ‘என் மண், என் மக்கள்’ பயணத்தில் தலைவர் அண்ணாமலை கூறினார்.

யாத்திரைப் பயணத்தில் அவர் பேசியதாவது:

இன்றைய காலை ‘என் மண், என் மக்கள்’ பயணம், விழுப்புரம் மாவட்டம் மயிலம் மற்றும் வானூர் சட்டமன்றத் தொகுதிகளில், தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், பெரும் திரளென பொதுமக்கள் கூடி ஆதரவளித்ததில் சிறப்புற்றது. கடந்த டிசம்பர் 19 அன்று, இந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவிருந்த பயணம், சென்னை மற்றும் தென்மாவட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக,  தமிழக பாஜக சார்பாக நாம் களத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதால், தாமதமாக நடைபெறுகிறது. இத்தனை காலமாக பொறுத்திருந்து, அதே எழுச்சியோடு பொதுமக்கள் இந்த யாத்திரையில் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி.

வரும் பாராளுமன்றத் தேர்தல், மிக முக்கியமான தேர்தல். மயிலம் சட்டமன்றத் தொகுதி மக்கள் ஆரணி பாராளுமன்றத்திற்கும், வானூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதிக்கும் வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை எத்தனையோ பாராளுமன்ற தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல்கள் நடந்திருந்தாலும், முதன்முறையாக, தேர்தல் முடிவுகள் தெரிந்தே பொதுமக்கள் வாக்களிக்கவிருக்கும் முதல் தேர்தல் இந்த பாராளுமன்றத் தேர்தல். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், நாடு முழுவதும் 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்கவிருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிந்த தேர்தல். நாடு முழுவதும் உள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார் நமது பிரதமர் அவர்கள்.

பாரதிய ஜனதா கட்சி, நமது நடைபயணத்துக்கு என் மண் ,என் மக்கள் என்று பெயர் வைத்திருக்கிறோம். திமுக நடைபயணம் செய்திருந்தால், என் மகன் என் மருமகன் என்று வைத்திருப்பார்கள். நமக்கும் திமுகவுக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் இதுதான். நம் மண்ணையும் மக்களையும் காக்க, அவர்கள் வாழ்வில் வளம்பெற, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, படிப்புக்கு ஏற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நமது யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுவரை இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களித்த நமது மக்கள், இந்த முறை, நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையில் வழங்கும் ஆதரவு பிரமிக்க வைக்கிறது. மோடி அவர்களுக்கு வாக்களித்தால், வளர்ச்சி, நல்ல சாலைகள், லஞ்ச லாவண்யம் இல்லாத நேர்மையான அரசு, வீட்டுக்கு வீடு குடிநீர், விவசாயிகளுக்கு ரூ.6,000 கௌரவ நிதி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு, தொழில் முனைவோர்களுக்கு முத்ரா கடனுதவி, என பல்வேறு நலத்திட்டங்கள் மக்களை அடைந்துள்ளன.

தமிழகத்தில் மக்களின் அன்பைப் பெற்று, 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும்போது, இதுவரை அரசு வேலை கிடைத்திராத குடும்பத்து இளைஞர்களுக்கு, அரசு வேலைகளில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி முன்னுரிமை கொடுக்கப்படும். திமுகவினர் வருமானத்திற்காக நடத்தப்படும் டாஸ்மாக் சாராயக் கடைகள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு வருமானம் தரும் கள்ளுக்கடைகள் திறக்கப்படும். அனைத்து சிறுவர் சிறுமியருக்கும், பள்ளிக் கல்வியிலே சமவாய்ப்பு உருவாக்கப்படும். உலகத் தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கும் மத்திய அரசின் இரண்டு நவோதயா பள்ளிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும், கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பெயரில் திறக்கப்படும்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், ஐந்து ஆண்டுகளில் 3.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்று கூறியிருந்ததில், தற்போது 34 மாதங்களில் வெறும் 10,600 பேருக்கு மட்டும்தான் அரசு வேலை வழங்கியிருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களை ஏமாற்றியிருக்கிறது. இது போன்று, திமுக செய்யும் தவறுகளுக்கெல்லாம் வரும் பாராளுமன்ற தேர்தலில் பதில் கொடுக்க வேண்டும். திமுக கொடுத்த 516 வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றி விட்டதாகப் பொய் கூறுகிறார் முதலமைச்சர். கல்விக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, சமையல் எரிவாயு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நெல், கரும்புக்கு ஆதார விலை உயர்வு, 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல் என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அனைத்து மகளிருக்கும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை என்று கூறி, தற்போது, 33% மகளிருக்கு மட்டுமே உரிமைத் தொகை கிடைக்கிறது.

திமுகவும் ,பங்காளிக் கட்சியும், கூட்டணி போட்டு மக்களை இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் கூறி வந்த பொய்களை நம்பி ஏமாந்தது போதும். வரும் பாராளுமன்றத் தேர்தல் வளர்ச்சிக்கான தேர்தல். நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியின் நலத்திட்டங்கள் தொடர, நமது குழந்தைகள் எதிர்காலம் பாதுகாப்பானதாக, சிறப்பானதாக அமைய, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். நாளை மறுநாள் பிப்ரவரி 27 அன்று, ‘என் மண், என் மக்கள்’ பயணத்தின் நிறைவு விழாவிற்கு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகருக்கு வரவிருக்கிறார். தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள், தங்கள் குடும்ப விழாவில் கலந்து கொள்வதைப் போல, பெருமளவில் கலந்து கொண்டு, நமது பிரதமர் அவர்களுக்கு உங்கள் ஆசிகளை வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top