பல்லடத்தில் லட்சக்கணக்கான மக்கள் சங்கமிக்க.. பிரதமர் மோடி முன்னிலையில் நிறைவடைந்த ‘என் மண், என் மக்கள்’  யாத்திரை!

தமிழகம் முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் சங்கமிக்க, காவி வெள்ளத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நேற்று, 27.02.2024 அன்று நிறைவடைந்தது.

தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி, என் மண், என் மக்கள் நடைபயணம் தொடங்கினார்.

மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற கோஷத்துடன் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் சாதனைகளை தமிழ்நாட்டு மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடைபயணம் 5 பகுதிகளாக 234 தொகுதிகளிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. நகர பகுதிகளில் நடந்து 1,700 கி.மீ. தூரமும், மற்ற பகுதிகளில் 900 கி.மீ. தூரமும் யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டது. நடைபயணத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆன் லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒன்றரை லட்சம் பேர் பதிவு செய்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், என் மண், என் மக்கள் நடைபயணம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஒரு, ‘ட்வீட்’ போட்டாலே பூகம்பம் வெடிக்கும்போது, 10 ஆயிரம் கி.மீ. அண்ணாமலை நடக்க போகிறார், ஸ்டாலின் அவர்களே, தி.மு.க., ஆட்சி என்ன ஆகப்போகிறதோ என கேள்வி எழுப்பினார். உலகிலேயே அதிக ஊழலில் திளைக்கிறது திமுக அரசு என்றும் அவர் கூறினார்.

ஆரம்பம் முதலே தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்திற்கு பொதுமக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு ஊரிலும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். குறிப்பாக இளைஞர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

திமுக ஆட்சியின் சீர்கேடு, வாரிசு அரசியல், மாநில அமைச்சர்களின் ஊழல், ஜால்ரா போடும் திமுக கூட்டணி கட்சிகள் என தலைவர் அண்ணாமலையின் ஆவேச பேச்சுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

அதேபோல் மத்திய பாஜக அரசின் சாதனைகள், பொருளாதாரம் குறித்து புள்ளிவிவரங்களுடன் ஆதாரங்களை அடுக்கிய அவரின் பேச்சு அனைத்து தரப்பு மக்களிடையே சென்றடைந்தது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள் ஆகியவற்றை புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டார். இதேபோல், உள்ளுர் பிரச்சினைகள் தொடர்பாக அவர் எடுத்து வைத்து கேள்விகள் ஆளும் தரப்பை மட்டுமின்றி அப்பகுதி அரசியல்வாதிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதேபோல் தலைவர் அண்ணாமலை அறிவித்த புகார் பெட்டியில் ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்தன. அந்த மனுக்களுக்கு உரிய தீர்வு பெற்று தரப்பட்டது. சில புகார்களுக்கு அவரின் பேச்சு மூலம் தீர்வு காணப்பட்டது. என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்டுத்தியுள்ளதாகவும், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக சுமார் 108 நாட்கள் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவடைந்தது.

நிறைவு நாளான நேற்று (பிப்ரவரி 27) திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் நடைபெற்றது. இதற்காக காலை 9 மணிக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணாமலை தனது பயணத்தை தொடங்கினார். இதனைத்தொடர்ந்து நிறைவு விழா நடைபெறும் பல்லடம் மாதப்பூருக்கு தொண்டர்கள் புடை சூழ சென்றார்.

அப்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் மாதப்பூர் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது அவரை தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

விழா நடைபெறும் பகுதிக்கு திறந்த ஜீப்பில் பிரதமர் மோடி சென்றார். அவருக்கு இருபுறங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் மலர்கள் தூவியும், மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற கோஷங்களை எழுப்பினர். அனைவருக்கும் பிரதமர் மோடி கையசைத்து தனது வணக்கத்தையும் தெரிவித்து சென்றார்.

லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியோடு என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு பெற்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top