திமுகவை சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன், ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தமாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, செய்தி சேகரிக்கச் சென்ற பாலிமர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர், திமுகவினரால் கடுமையாக தாக்கப்பட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தனர். அதில் திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இதனையடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை மேற்கொண்டு அங்கு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர்.
மேலும் ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களிலும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதே போன்று சென்னை மேற்கு திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசுவின், ‘‘சகாரா எக்ஸ்பிரஸ்’’ கொரியர் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனையிட்டதாக கிடைத்த தகவலின் பெயரில் ,செய்தி சேகரிக்க சென்ற பாலிமர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் மற்றும் செய்தியாளர் கதிரவன் ஆகியோர் திமுகவினரால் அறையில் கட்டி வைத்து, கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் படுகாயங்களுடன் அவர்கள் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருள் பற்றி செய்தி சேகரிக்கச் சென்றால், செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில்தான் தமிழகம் உள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.
பத்திரிகை, கருத்துச் சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் திமுகவினர், ரவுடிகள் போன்று அட்டூழியங்களில் ஈடுபடுவதுதான் திராவிட மாடலா? இது போன்றவர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.