மத்திய அரசின், ‘பாரத் அரிசி’ விற்பனை துவக்க விழா நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் உழவர் சந்தை அருகில் நேற்று (பிப்ரவரி 29) நடந்தது. இதனை மாநிலத் துணைத்தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி துவக்கி வைத்தனர்.
பின்னர் இருவரும் கூறியதாவது:
இன்னும் ஓரிரு வாரங்களில் பல்வேறு கட்சிகளின் மூத்த நிர்வாகிகள், தலைவர்கள் பாஜகவில் இணைய உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்.
விஜயதாரணி பாஜகவில் இணைந்ததால், விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவித்துள்ள நிலையில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பொன்முடியின் தொகுதியான திருக்கோவிலூரை காலியிடமாக உடனடியாக அறிவிக்க வேண்டும்.
பிரதமரின் வருகை தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தேச ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கை இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளபோதும், முதல்வர் ஸ்டாலின் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.