திமுக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான பேருந்தில் அரசு பேருந்து டிக்கெட் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக திமுகவை சேர்ந்த கதிரவன் உள்ளார். இவருக்கு சொந்தமாக தனலட்சுமி சீனிவாசன் ட்ரான்ஸ்போர்ட் என்ற பேருந்து துறையூர் முதல் பெரம்பலூர் வரை இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் நக்கசேலத்தில் இருந்து பெரம்பலூருக்கு பயணம் செய்தார்.
அப்போது அவர் 17 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். அந்தப் பேருந்தில் அவருக்குக் கொடுத்த டிக்கெட்டின் ஒரு பக்கத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் என்றும் மற்றொரு பக்கத்தில் தனலட்சுமி சீனிவாசன் ட்ரான்ஸ்போர்ட் என்றும் அந்த டிக்கெட்டில் நாள் பயண தேதி உள்ளிட்டவை அச்சிடப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் சக பயணிகளிடம் கேட்டபோது அனைவருக்குமே இதே போல் தான் டிக்கெட் விநியோகித்திருப்பதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணி ராமர் டிக்கெட்டை போட்டோ மற்றும் வீடியோக்களாக எடுத்து அதனை சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டார்.
திமுக எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான பேருந்தில் ,அரசு பேருந்து டிக்கெட் விற்பனை செய்யப்படுவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.