தமிழகத்தில் நடைபெறும் பேய் ஆட்சியான திமுகவை விரட்டியடிக்க வேண்டும் என்று நேற்று(மார்ச் 4) சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பாஜக வின் ” தாமரை” பொதுக்கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
உலகம் போற்றும் உத்தம தலைவர் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சென்னைக்கு நம்மை எல்லாம் சந்தித்து பேசுவதற்காக வந்துள்ளார். இதற்கு முன்பு பல முறை சென்னைக்கு நமது பிரதமர் அவர்கள் வந்திருந்தாலும் கூட ,இந்த முறை நமது குடும்பத்தை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்.
ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை சந்தித்து, உங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கும் பாரதப் பிரதமரை உங்கள் அனைவரின் சார்பாகவும் வருக, வருக என வரவேற்று மேடையில் உள்ள அனைத்து தலைவர்கள், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், தேவநாத யாதவ் உட்பட கூட்டணி கட்சியின் தலைவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
நமது மத்திய அமைச்சர் முருகன் அவர்கள் சொன்னார்கள், நாம் மோடியின் குடும்பம் என்று . பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் சொல்கிறார், மோடிக்கு குடும்பம் இல்லை எனவும், தனி மனிதர் என்றும் சொல்கிறார்.
அப்போ நாம் யார்? 140 கோடி மக்கள் நாம் இருக்கும்போது, மோடியின் குடும்பம் நாம் இருக்கிறோம் என்று சொல்வோம். அனைவரும் உரக்க சொல்வோம் என்றார். லாலு பிரசாத் போன்றவர்களின் கண்களுக்கு கோபாலபுரத்தின் குடும்பம் மட்டுமே கண்ணுக்கு தெரியும். திமுக குடும்பம் மட்டுமே தெரியும். பீகாரில் தொடர்ச்சியாக ஒரே குடும்பம் ஆட்சியில் இருக்க வேண்டும், அதாவது தனது குடும்பம் மட்டுமே ஆட்சி செய்யே ண்டும என்று நினைக்கக்கூடியவர் தான் லல்லு பிரசாத் யாதவ்,
17 வயதில் தன்னுடைய வீட்டை விட்டு இந்தியா முழுவதிலும் சுற்றித் திரிந்து, இன்று கிட்டத்தட்ட ஒரு யோகியாக தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்திருக்கக்கூடிய, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மொத்தக் குடும்பமும் 140 கோடி மக்கள் அமர்ந்துக் கொண்டிருக்கிறோம் சகோதர, சகோதரிகளே.
இந்தத் தேர்தலில் நாம் மோடி ஐயாவின் குடும்பம் என்று நிற்கும்பொழுது, கோபாலபுரத்தின் குடும்பத்தையும் திமுகவின் சிற்றரசுகளை போல தமிழகம் முழுவதும் வளர்ந்து இருக்கக்கூடிய, நான்காவது தலைமுறையாக அரசியலில் இருக்கும் எல்லாக் குடும்பத்தையும் அரசியலில் இருந்து அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது சகோதரர்களே.
2024 பாராளுமன்றத் தேர்தல் நமக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு. நிச்சயமாக இதனை பயன்படுத்தி மோடியின் குடும்பமாக இருக்கக்கூடிய நமது தமிழ் சொந்தங்கள் எல்லாம் இந்த முறை பட்டித்தொட்டி எல்லாம் 400 எம்.பி.க்களை தாண்டி பிரதமர் மோடி ஐயா மூன்றாவது முறையாக பிரதமராக வரும்பொழுது தமிழகத்தில் இருந்து 39 எம்.பி.க்களையும் அனுப்பி வைக்கும் தலையாய கடமை நமக்கு இருக்கிறது.
இன்று நமது மோடி ஐயா அவர்களுக்கு காஞ்சிபுரத்தின் பட்டில் நெய்யப்பட்ட ஒரு சால்வையை அணிவித்தோம். அந்த சால்வையில் மோடி ஐயாவிற்காக ஒரு சிறுத்தைப்புலி அச்சிடப்பட்டுள்ளது. நிறைய பேர் நினைக்கலாம் எதற்காக பட்டு சால்வையில் சிறுத்தை புலி அச்சிட்டுக் கொடுத்திருக்கிறோம் என்று. மக்களுக்கு மட்டும் பாடுபடவில்லை, மோடி ஐயா வாய் பேச முடியாத ஜீவன்களுக்கும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
2014ம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வரும்பொழுது 7,910 சிறுத்தைப் புலி இருந்தது. இன்றைக்கு 75 சதவீதம் உயர்ந்து 13874 சிறுத்தைப் புலி உள்ளது. அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான் நமது மண்ணிலே நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டு சால்வையில் சிறுத்தைப்புலி அச்சிடப்பட்டது.
இன்னொரு அன்பளிப்பு கொடுத்திருக்கிறார்கள். மோடி ஐயா சொல்கிறார் உள்ளூர் பொருட்களை வாங்குங்கள். நாம் இன்று மோடி ஐயா அவர்களுக்காக பனைமர தொழிலாளர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் இருந்து செய்யப்பட்டவற்றை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறோம்.
மோடி ஐயா அவர்களின் வெற்றியைப் பற்றி யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா? மோடி ஐயா 400 தொகுதிகளை தாண்டுவார் என்று அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது. உறுதியாக 400 தொகுதிகளை தாண்டுவார்.
நாம் இன்று செய்ய வேண்டிய தலையாய கடமை, தமிழகத்தில் இருந்து 39 பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று சபதம் எடுப்போம்.
தமிழகத்தில் நடக்கக்கூடிய திமுக ஆட்சி என்பது ,பாஞ்சாலி சபதத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதி சொல்லியிருக்கிறார் பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று. ஒரு பேய் ஆட்சி செய்தால் ஒரு நாடு எப்படி இருக்குமோ இன்றைக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி அதற்கு சாட்சி.
கொள்ளைக்காரன், மண் கடத்துபவன், சாராயம் விற்கிறவன், கஞ்சா விற்கிறவன் ஆகியோருக்கு இந்த நாட்டிலே முதல் மரியாதை. சாதாரண பொதுமக்களுக்கு மரியாதையே இல்லிங்க. இந்த பேய் ஆட்சியை அகற்ற வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது சகோதரர்களே.
அதனால் பொறுமையாக மோடி ஐயாவின் பேச்சிற்காக காத்திருக்கும் சகோதர, சகோதரிகளே ஒரு வேலை செய்வோம். அடுத்த 60 நாள் மிக முக்கியமான நாள். மோடி ஐயா அவர்கள் மத்திய அமைச்சரவைக் கூட்டம் போட்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டம் போட்டு வைத்துவிட்டு நம்மிடம் வந்துள்ளார். இது போன்ற அற்புதமான தலைவரை நாம் வைத்திருக்கிறோம். அதற்காக 2024 ஆம் ஆண்டு அடித்தளத்தை அமைப்பதற்காக தயாராக இருக்கிறார். எனவே நாம் மோடியுடன் நிற்போம். மோடி குடும்பத்தின் சார்பில் தமிழகத்தில் இருந்து 39 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்க வேண்டும்.அதற்காகபாடுபடுவோம் என்று கூறியதுடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனதுஉரையை நிறைவு செய்தார்.