சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (மார்ச் 4) பாஜக சார்பில் பிரமாண்டமான முறையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், நமது குடும்பம் மோடி குடும்பம் என்று முழக்கமிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது:
“உலகம் போற்றும் நாயகர் மோடி ஐயா! தரணி போற்றும் நாயகர், காசி தமிழ்ச்சங்கமம் நடத்தியவர் என்றார். தமிழ் குடும்பம் சார்பில் மோடி ஐயாவை வருக, வருக என வரவேற்கிறோம் ” என்றார். தொண்டர்கள் உற்சாகத்துடன் கைத்தட்டினர்.
தமிழகத்திற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஐயா வருகை தரும்போது, புதிதாக திட்டங்களை கொடுத்துக்கொண்டுதான் தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
இன்றைக்கு 500 மெகா வாட்டிற்கான திட்டத்தை பிரதமர் கல்பாக்கத்தில் தொடங்கி வைத்துவிட்டு நமது பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார். போன வாரம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.17,500 கோடிக்கான திட்டம், அதற்கு முன்னர் வரும்போது ரூ.20 ஆயிரம் கோடிக்கான திட்டம். இப்படி கடந்த பத்தாண்டுகளில் மட்டும் நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐயா அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.
நமது பிரதமர் தமிழ் மொழியை, தமிழ் மக்களை நேசிப்பதில் எந்த அளவிற்கு இருக்கிறார் என்றால், உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் தமிழர்களின் பாரம்பரியம், மொழியின் பெருமையை எடுத்து சென்றிருக்கிறார். அப்படிப்பட்ட பிரதமர் இன்றைக்கு நமது இடத்திற்கு வருகை தந்துள்ளார்.
நமது பிரதமரை தமிழக குடும்பத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு வருக, வருக என வரவேற்கிறோம் என்றதுடன்,மீண்டும் ஒரு முறை “நமது குடும்பம் மோடி குடும்பம் ” என்ற முழக்கத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.