போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள, திமுகவின் அயலக அணியின் துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்கின் சகோதரர் அகமது சலீமை விசிகவில் இருந்து அவசரம், அவசரமாக நீக்கியுள்ளார் திருமாவளவன்.
திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவின் அயலக அணியின் நிர்வாகியான ஜாபர் சாதிக் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அவரை தேடும் பணியில் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்தி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் தலைமறைவாகினார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை , விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து திருமாவளவன் நீக்கம் செய்துள்ளார்.
கடந்த ஒரு வாரம் காலமாக தமிழகத்தில் முகாமிட்டு டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது விசிகவில் இருந்து முகமது சலீமை , திருமாவளவன் அவசரம், அவசரமாக நீக்கியுள்ளார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் விசாரணை வளையத்தில் அரசியல் புள்ளிகள் இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பிடிபடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். தப்பு செய்துவிட்டு மதத்தின் பின்னால் மறைந்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.