சென்னை, பர்மா பஜாரில் திருட்டு ‘சிடி’ விற்றுக்கொண்டிருந்த ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் தொழில் சாம்ராஜ்யம் குறித்தும், சமீபத்தில் அவர் மேற்கொண்ட கென்யா நாட்டு பயணம் குறித்தும், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனும், திமுகவின், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி முன்னாள் துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக்கை, டெல்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தமிழகத்தில் முகாமிட்டு தனிப்படைகள் அமைத்து வலை வீசி தேடி வருகின்றனர். ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொழில் சாம்ராஜ்யம் தொடர்பாக, பல கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை பர்மா பஜாரில் திருட்டு, ‘சிடி’ விற்று வந்த ஜாபர் சாதிக்கிற்கு 2006ல் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர் முகமது சாதிக் பாட்ஷாவின் நெருங்கிய நட்பு கிடைத்தது.
இவர் தான் போதைப் பொருள் கடத்தல் தொழிலுக்கு ஜாபர் சாதிக்கின் குரு. துவக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவர்கள், பின்னாளில் எல்.எஸ்.டி., மற்றும், ‘மெத்தாம்பேட்டமைன்’ உள்ளிட்ட போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டனர். பின் தொழில் போட்டி காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
ஜாபர் சாதிக் தன் சகோதரர் முகமது சலீம், உறவினர் நூருதீன், நண்பர்கள் அப்துல்லா, ரஹீம் ,ஜின்னா உள்ளிட்டோருடன் சேர்ந்து போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட துவங்கினார். கடந்த 2009ல் முகமது சலீம், அப்துல்லா, ரஹீம் ஜின்னா மற்றும் நூருதீன் ஆகியோர், மலேஷியாவுக்கு, ‘கேட்டமைன்’ எனப்படும் போதை பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டனர். அப்போது தான் இவர்களின் தலைவனாக ஜாபர் சாதிக் செயல்படுவது தெரியவந்தது.
இதையடுத்து 2013ல் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். பின் அவரது குருவான முகமது சாதிக் பாட்ஷாவும் கைது செய்யப்பட்டார். சென்னை, மும்பை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது தான், ஜாபர் சாதிக் தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தினார். ஜாமினில் வெளி வந்த பின் போலீசாரிடம் சிக்காமல் இருக்க துபாயில் மூன்று ஆண்டுகள் பதுங்கி இருந்தார்.
அதன்பின் 2019ல் மலேஷியாவுக்கு 38 கிலோ கேட்டமைன் என்ற போதைப் பொருள் கடத்திய வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வெளிவந்த பின் தமிழகத்தில் இருந்தபடி மீண்டும் தன் ஆட்டத்தைத் துவக்கினார். போதைப் பொருள் கடத்தலுக்காகவே, உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வது போல, ‘ஜூகோ ஓவர்சீஸ்’ எனும் நிறுவனத்தை துவங்கினார். இதில் கோலிவுட்டை சேர்ந்த பிரபல இயக்குனரும் தொழில் பார்ட்னரக இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்களின் நிறுவனத்தில் அகமது முஸ்ரப் என்ற அப்துல் காதர், பிப்ரவரி 15ல் டெல்லியில் கைதான, சென்னையைச் சேர்ந்த முகேஷ்; முஜிபுர் ரஹ்மான்; அசோக்குமார் ஆகியோர் வேலை பார்த்துள்ளனர். இவர்கள் வாயிலாக, வெளிநாடுகளுக்கு மெத்தாம்பெட்டமைன் போதை பொருள் தயாரிக்க பயன்படுத்தும், ‘ஸூடோஎபிட்ரின்’ கடத்தி, பல கோடி ரூபாய் சுருட்டியுள்ளார்.
ஜாபர் சாதிக்கிற்கு எதிராக, பாஸ்போர்ட் முடக்கம், ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வெளியீடு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இதிலிருந்து தப்பிக்க முக்கிய கட்சியின் தலைமைக்கு நெருக்கமாக நபராக மாறினார். சினிமா தயாரிப்பாளர், ஓட்டல் அதிபர் என நடித்து நடிகர், நடிகையர், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் திமுக அமைச்சர்கள், எம்.பி., -எம்.எல்.ஏ.,க்கள் என, அனைவரிடமும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவரது தொழில் சாம்ராஜ்யம் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.