பா.ஜ.க., கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி: சரத்குமார் அறிவிப்பு!அண்ணாமலை வரவேற்பு !

பாரதிய ஜனதா கட்சியுடன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 06) வெளியிட்டுள்ள அறிக்கையில்;

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் திரு.அரவிந்த் மேனன் அவர்கள் பிப்ரவரி 28ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து, பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் ஒருமித்த கருத்துகள் ஏற்பட்டதால், நேற்று (05.03.2024) மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்கள், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள், பாஜக தமிழக பொறுப்பாளர் மற்றும் தேசியச் செயலாளர் அரவிந்த்மேனன் அவர்கள் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஏற்கனவே எனக்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் :

” நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஊழலற்ற நேர்மையான அரசின் செயல்பாடுகள் மீது முழு நம்பிக்கை கொண்டும், தேச நலனிற்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் பிரதமர் முன்னெடுக்கும் திட்டங்களால் ஈர்க்கப்பட்டும் ,தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து செயல்பட முன் வந்திருக்கும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமாரை தமிழக பாஜக சார்பாக வரவேற்று மகிழ்கிறோம்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 400  இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்க இருக்கும் நேரத்தில் ,தேசியத்தின் மற்றும் ஒரு குரலான அண்ணன் சரத்குமார் வரவு தமிழகத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு நிச்சயம் உந்து சக்தியாக அமையும் என்பது உறுதி” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top