எங்கள் ஓட்டில்தானே ஜெயித்தாய்? காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வை ஒருமையில் திட்டிய திமுக நகர்மன்றத் தலைவர்!

மயிலாடுதுறையில் அரசு கல்லூரியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்காத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வை, தி.மு.க நகர்மன்றத் தலைவர் ஒருமையில் பேசி திட்டியுள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் புதிய கட்டிடம் மற்றும் நூலகம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.4.40 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து நூலகத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நேற்று போடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ராஜ்குமார் அழைக்கப்பட்டுள்ளார். பூமி பூஜையில் கலந்துகொண்ட ராஜ்குமார் பணியை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்த தருவாயில் அங்கு வந்த மயிலாடுதுறை நகராட்சி நகர்மன்றத் தலைவர் செல்வராஜ். , எம்.எல்.ஏ ராஜ்குமாரை பார்த்து அண்ணே நீங்க இருக்கீங்கனு தெரிஞ்சிருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேன் என்றார் பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் எம்.பி., மற்றும் நகர்மன்றத் தலைவரை அழைக்கமாட்டீங்களா? திருட்டுத்தனமா செய்கிறீர்களா? என கேட்டார்.

அங்கிருந்தவர்கள் என்ன சொல்வது என தெரியாமல் கையை. பிசைந்தபடி நின்றுள்ளனர். அவர்களை பார்த்து செல்வராஜ், எல்லாத்துக்கும் தலையை ஆட்டினால் என்ன அர்த்தம் என கேட்டதுடன், முதலமைச்சர் அறிவித்த திட்டம் தானே? அவர் தானே நிதி ஒதுக்கினார்… நாலு பேர்கிட்ட சொல்றதுல என்ன சங்கடம். எம்.எல்.ஏ இன்னைக்கு இருந்துட்டு போய்விடுவார் என பேசியவர் ஒருகட்டத்தில் எம்.எல்.ஏ ராஜ்குமாரை ஒருமையில் பேச ஆரம்பித்தார்.

காங்கிரஸ் கட்சி ஓட்டை வாங்கியா எம்.எல்.ஏ-வாக ஜெயித்தார், தி.மு.க ஓட்டை வாங்கித்தானே ஜெயித்தார் என்றவர், ராஜ்குமாரை பார்த்து, நீ எம்.எல்.ஏ தானே… நீ வந்தது தப்பு, எப்படி வந்த நீ? உன்னை ஜெயிக்க வைத்தது யாரு? மயிலாடுதுறையில் யாரும் உனக்கு ஓட்டு கேட்கவில்லை, நான் தான் உன்னை ஜெயிக்க வைத்தேன் என் ரத்தம் கொதிக்குது, நான் வயித்தெரிச்சல் பட்டேன் என்றால், உன் காரை உள்ளே விட மாட்டேன் என, செல்வராஜ் தன் கையை நீட்டியபடி காரில் உட்கார்ந்திருந்த ராஜ்குமாரை பார்த்து பேசினார்.

பதிலுக்கு காரில் இருந்தபடியே என்னை பற்றி நீ பேசுறீயா… என கேட்டுக்கொண்டே காரில் கிளம்பி விட்டார் ராஜ்குமார். இதனால் அங்கிருந்தவர்கள் என்ன செய்வதென புரியாமல் விழித்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பேசும் பொருளாக மாறியுள்ளது. திமுகவினரிடம் போய் காங்கிரஸ் கட்சியினர் மரியாதையை எதிர்பார்க்கலாமா என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top