நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், நமது பாரதப் பிரதமரின் சிறந்த மகளிர் தின பரிசாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு அமைந்துள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மகளிர் தின பரிசாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ.100 குறைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில்;
சர்வதேச மகளிர் தினமான இன்று, நமது நாட்டில் பல கோடி பெண்கள் பயன்பெறும் வகையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக மக்கள் சார்பாகவும் தமிழக பாஜக சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சுமார் 10 கோடி உஜ்வாலா பயனாளிகளுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் மானியம், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற நேற்றைய அறிவிப்பும், சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற இன்றைய அறிவிப்பும், நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், நமது பாரதப் பிரதமரின் சிறந்த மகளிர் தின பரிசாக அமைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.