இதுதான் நமக்கு கடைசி தேர்தல்.. திமுக மேடைகளில் அலறும் நிர்வாகிகள்!

‘யாரை பார்த்தும் எங்களுக்கு பயமில்லை’ என்று பேசி வந்த திமுக தலைவர்கள் தற்போது மேடைகளில் ‘இது தான் நமக்கு கடைசி தேர்தல்’ என்று அலறி வருகின்றனர்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற வேண்டும் என்று கட்சி மேலிடம் உறுதியாக உள்ளது; அதற்கேற்ப தமிழக தலைவர் கே.அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இதனால் தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். அதே போன்று என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

தமிழகம் வரும்போதெல்லாம் பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை துவக்கி வைத்து, தமிழ்ப் பண்பாட்டின் அருமை, பெருமைகளை பேசி வருகிறார். இது தமிழர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதுவரையிலும் எங்களுக்கு யாரை கண்டும் பயமில்லை என்று திமுக தலைவர்கள் பேசி வந்தனர். பேட்டி கொடுத்து வந்தனர்.

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த விடுவதில்லை தேர்தலுக்கு பின் தமிழகத்தில் திமுக இருக்காது, என மிக கடுமையாக பேசினார்.

இதைத்தொடர்ந்து திமுக தலைவர்கள் மற்றும் மேடைப் பேச்சாளர்களின் பேச்சு வேறு திசையில் செல்லத் தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் பொள்ளாச்சியில் திமுக சார்பில் நடந்த ‘உரிமை மீட்க ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் பேசிய எம்.பி., சிவா, இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நாட்டு மக்களின் எதிர்காலம் நிம்மதியாக இருக்காது. இது சோதனை காலம். எவ்வளவு பெரிய சதி வந்தாலும் முறியடித்து மக்கள் சக்தியை கொண்டு வெற்றி பெற வேண்டும். கட்சியினர் உறக்கம் கொள்ளாமல் பாடுபட வேண்டும் என்றார்.

திமுக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, ஒரு வேளை பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தலே நடக்காது. அதிபர் ஆட்சிதான் என்றார்.
இது போன்று கட்சி நிர்வாகிகள் பேச்சைக் கேட்கும் தொண்டர்கள், இதுவரை இல்லாத வகையில் இந்த தேர்தலில் ஏன் இவ்வளவு பதற்றம்? என குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து திமுகவினர் கூறும்போது;

அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். பொன்முடி அமைச்சர் பதவி இழந்ததுடன் எம்.எல்.ஏ., பதவியும் பறிபோனது. தற்போது அமைச்சர் பெரியசாமி வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது போன்று அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளால் எங்கள் கட்சியில் பதற்றம் நிலவுகிறது. போதாக்குறைக்கு போதைப்பொருள் கடத்தல் சம்பவமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த விஷயங்களையெல்லாம் வைத்து, திமுக தரப்பு மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அதைக் குறிப்பிட்டு தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் மேடைகளில் பேசி வருகின்றனர்.
இது பொதுமக்கள் மத்தியில் பெரிதாக எடுபட்டுள்ளதால் தேர்தலில் கட்டாயம் எதிரொலிக்குமோ என்ற அச்சம் உள்ளது. இதைத்தான் மேடைகளில் கட்சித் தலைவர்களும் எதிரொலிக்கின்றனர்.

இவ்வாறு தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top