தேசத்தின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் சமத்துவ மக்கள் கட்சி இன்று முதல் பாஜகவுடன் இணைக்கப்படுகிறது என சரத்குமார் தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமாருடன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைப்பதாக தெரிவித்தார்.
சரத்குமார் பாஜகவில் இணைந்தது பற்றி தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாரதிய ஜனதா கட்சியின் குடும்பம் இன்றைய நாள் பெரிதாக மாறியுள்ளது. இன்றைக்கு ஜனநாயக முறைப்படி உலகத்தில் மிக அதிகமான உறுப்பினர்களை கொண்ட கட்சியாக பாஜக உள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டு இரண்டு எம்.பி.க்களுடன் இருந்தது. ஆனால் இன்றைக்கு 303 எம்.பி.க்களுடன் கட்சி வளர்ந்துள்ளது.
தேசிய நீரோட்டத்தில் இன்று சமத்துவ மக்கள் கட்சி இணைந்திருக்கிறது. இன்னும் அதிகமான இடத்திற்கு கட்சியை எடுத்துச்செல்வோம். பாஜகவை பொறுத்தமட்டில் ஈகோவை பார்க்க மாட்டார்கள். தொண்டர்களை வைத்து நடத்தக்கூடிய கட்சி ஆகும்.
நமது நாட்டாமை அண்ணன் (சரத்குமார்) சினிமாத்துறையில் கால் பதித்திருக்கிறார் என்று சொல்வதை விட, அவர்களது குடும்பத்தைப் பற்றி எல்லோருக்குமே தெரியும். அவர்கள் அனைவருக்கும் தேசியம் என்பது ரத்தத்தில் கலந்த ஒரு உணர்வு ஆகும். இன்றைக்கு ஒரு உண்மையான மனிதராக எல்லோராலும் ஏற்றுக்கொண்ட மனிதர்தான் சரத்குமார் அவர்கள். இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நான் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எப்போதும் ஒரு தனித்துவம் இருக்கும். உங்கள் கட்சி வெளியிடும் அறிக்கையை விரும்பி படிப்பேன். அறிக்கையில் என்ன சொல்கிறார்கள் என்பதையும் பார்ப்பேன். அண்ணன் சரத்குமார் அவர்களின் பெரிய ரசிகன் நான்.
கடந்த நான்கு ஐந்து நாட்களாகவே சரத்குமார் அண்ணன் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். அதாவது மோடி அவர்கள் பிரதமராக வரும்போது அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாம் பேசுவோம். மூன்றாவது முறையாக மோடி அவர்கள் 400 தொகுதிகளை கடந்து பிரதமராக அமர்வார். அதில் நானும் பங்காற்ற வேண்டும் எனது கட்சியும் பங்காற்ற வேண்டும் என கூறியவர் சரத்குமார்.
அண்ணன் கிட்ட பேசும்போது மற்ற அரசியல் தலைவர்கள் போன்று தெரியவில்லை. மற்றவர்கள் பேரம் பேசுவார்கள். நாங்கள் கட்சியில் இணைந்தால் எங்களுக்கு என்ன கொடுப்பீர்கள் என்று எல்லாம் பேசுவார்கள். ஆனால் சரத்குமார் அண்ணன் அப்படி எதுவுமே பேசவில்லை. நான் வந்தால் மோடிக்கு என்ன லாபம் என்பதை மட்டும் பேசினார்.
உங்களது அலுவலகத்திற்கு வந்து உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக தவறாக எதையும் சொல்லவில்லை. நேற்று ஆச்சரியம் என்னவென்றால், சமகவின் தலைவர்கள் எல்லாம் பாஜகவின் அலுவலகத்திற்கு வந்து நமது தலைவர்களை எல்லாம் பார்த்து பேசிவிட்டு சென்றனர்.
நேற்று நள்ளிரவை தாண்டி அண்ணன் சரத்குமார் செல்போனில் தொடர்பு கொண்டார். இந்த மாதிரி யோசித்து பார்த்தேன். நானும் மற்ற அரசியல்வாதியை போன்று இருந்துவிடக் கூடாது, எனது கட்சியும் இருக்கக்கூடாது. எனவே நான் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். இதை எப்படி எனது சகோதர, சகோதரிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் காலையில் அவர்கள் அனைவரையும் அழைத்து சொல்லப்போகிறேன் என்று அண்ணன் சரத்குமார் அவர்கள் கூறினார்.
அதாவது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, மோடி அவர்களுடன் இணைந்து 2024ஆம் ஆண்டு தேர்தலுக்காக தேசிய நீரோடையில் இணைந்து பாடுபட போகிறேன் என சரத்குமார் அவர்கள் தெரிவித்தார். நான் ஏற்கனவே பேச ஆரம்பித்தபோது சொன்னேன். பாரதிய ஜனதா கட்சியின் குடும்பம் பெரியதாக மாறியுள்ளது. இன்றைக்கு வந்தார்கள், நேற்று வந்தார்கள் என்று பாஜக பார்க்காது. இன்று இருப்பவர்கள் மற்றும் நாளைக்கு பாஜகவிற்கு வரப்போகின்றவர்கள் அப்படிதான் நாங்கள் பார்க்கிறோம். இன்று எங்களுக்கு பொறுப்பு அதிகமாக கூடியுள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தமைக்கு இரண்டு கைக்கூப்பி வரவேற்கிறோம். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.
அதன் பின்னர் சரத்குமார் பேசியதாவது:
பா.ஜ.க.வுடன் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மக்கள் பணிக்கான தொடக்கம். நாட்டின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும்தான் இந்த முடிவு. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சியமைக்க சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று பா.ஜ.க.வுடன் கட்சியை இணைத்த பின் சரத்குமார் கூறினார்.