ஹரியானா சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நயாப் சிங் சைனி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு வெற்றி பெற்றது. புதிய முதல்வராக நயாப் சிங் சைனி நேற்று பதவி ஏற்ற நிலையில், இன்று (13.03.2024) நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார். இதனால் பாஜக அரசு தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
ஹரியானாவில் கடந்த 2014ல் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. மனோகர் லால் கட்டார் முதல்வரானார். கடந்த 2019ல் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க. 41ல் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி., 10 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 30 இடங்களிலும், இந்திய தேசிய லோக்தளம் மற்றும் ஹரியானா லோஹித் கட்சி, தலா ஒரு இடங்களில் வென்றன.
இதையடுத்து ஜே.ஜே.பி., மற்றும் ஏழு சுயேச்சைகளில், ஆறு பேரின் ஆதரவுடன் மனோகர் லால் கட்டார் மீண்டும் முதல்வரானார். துஷ்யந்த் சவுதாலா, துணை முதல்வரானார்.
இந்த நிலையில், நேற்று ஜனநாயக ஜனதா கட்சியுடனான கூட்டணியை பா.ஜ.க. முறித்தது. முதல்வர் மனோகர் லால் கட்டார் அமைச்சரவை ராஜினாமா செய்தது. சுயேச்சைகள் ஆதரவுடன் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. ஆனால் யாரும் எதிர்பாராத திருப்பமாக முதல்வர் மாற்றப்பட்டார். பா.ஜ.க. மாநில தலைவர் நாயப் சிங் சைனி புதிய முதல்வராக பதவியேற்றார்.
இந்த நிலையில், புதிய முதல்வராக நயாப் சிங் சைனி நேற்று பதவி ஏற்ற நிலையில், இன்று (13.03.2024) நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார். 90 உறுப்பினர்களில் பா.ஜ.க.வை சேர்ந்த 41 எம்.எல்,ஏக்களும், ஏழு சுயேச்சை எம்.எல்,ஏக்களில் 6 பேரும், லோஹித் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் என மொத்தம் 48 எம்.எல்.ஏ.,க்கள் நயாப் சிங் சைனிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றது.