‘‘தமிழ்நாட்டிற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் தி.மு.க., எதிரி’’ என கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 15) கன்னியாகுமரி வந்தார். அவரை மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற பிரதமர் அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்திற்கு சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் மலர்களை தூவி பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.
அனைவருக்கும் உற்சாகமாக கையசைத்தபடி பிரதமர் மோடி காரில் சென்றார். பொதுக்கூட்டம் நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தை அடைந்தார். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மோடி, மோடி என உற்சாகமாக கரகோஷம் எழுப்பினர். பொதுக்கூட்ட மேடையில் கூட்டணித் தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பிரதமரை வரவேற்றனர்.
அதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
1990களில் கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காஷ்மீருக்கு யாத்திரை சென்றேன். இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்துள்ளேன். நாட்டை துண்டாட நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர்; தமிழக மக்களும் வரும் தேர்தலில் தூக்கி எறிவார்கள். தமிழகத்தில் ‘இ.ண்.டி.’ கூட்டணி எடுபடாது; தி.மு.க., -காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும். இ.ண்.டி. கூட்டணியின் கர்வத்தை தமிழக மக்கள் அடக்குவார்கள்.
இ.ண்.டி. கூட்டணி கட்சிகளின் ஊழல் பட்டியல் மிகவும் நீண்டது. 2ஜி, நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் என ஊழல் பட்டியல் நீளும். ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிப்பதே இ.ண்.டி. கூட்டணி கட்சிகளின் இலக்கு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதிய ஜனதா கட்சியின் அலை வீசுகிறது. இ.ண்.டி. கூட்டணி தமிழகத்தில் எவ்வித வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது.
காங்கிரஸ் ஆட்சியில், முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதிலும் ஊழல் செய்தனர். கன்னியாகுமரி மக்களை எப்படி சுரண்டலாம் என்று தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி காத்துக் கொண்டுள்ளது. தமிழக மண்ணில் பெரிய மாற்றத்தை காண்கிறேன். மார்த்தாண்டம்- பார்வதிபுரம் இடையிலான மேம்பாலம் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்த பின் தான் நிறைவேறியது. கன்னியாகுமரி- திருவனந்தபுரம் சிறப்பு வழித்தடத்தை நிறைவேற்றியது பா.ஜ.க.
தி.மு.க., தமிழ்நாட்டின், தமிழ் கலாச்சாரத்தின் எதிரி. சாதாரண எதிரி அல்ல. நமது கடந்த காலத்தையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரி. அயோத்தி கும்பாபிஷேக நிகழ்ச்சியை பார்க்க அக்கட்சி விரும்பவில்லை. தமிழகத்தில் தொலைக்காட்சியில் காட்டுவதற்கும் தடை விதித்தது. இதனை உச்சநீதிமன்றம் கண்டித்தது. திமுக நமது பண்பாட்டின் மீது வெறுப்பைக் கக்குகிறது.
இ.ண்.டி. கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது. மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஜோ.டி.குரூஸ் ஆற்றிய பணிகளை மனதார பாராட்டுகிறேன். ரயில்வே பணிகளுக்காக 6,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க., எதிரியாக உள்ளது; நம் பாரம்பரியத்தை எதிர்க்கும் எதிரி தி.மு.க.,
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது காங்கிரஸ், தி.மு.க., அமைதியாக வேடிக்கை பார்த்தது. ஆனால் ஜல்லிக்கட்டை பா.ஜ.க., அரசு தான் மீட்டெடுத்தது. ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பெருமை. தமிழகத்தின் பாரம்பரியமிக்க சிறப்பு அம்சங்களை மோடி இருக்கும் வரை யாராலும் அசைக்க முடியாது. நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவதை திமுக புறக்கணித்தது. இனிமேல் தமிழக பெருமையை யாராலும் புறக்கணிக்க முடியாது. அதனை அனுமதிக்க மாட்டேன்.
கன்னியாகுமரியில் இவ்வளவு பெரிய ஆதரவுக் குரலை கேட்டு டெல்லியில் எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் கெட்டு விட்டது. உங்களின் அன்பும், பாசமும் ஆதரவும் மொத்த இந்தியாவிற்கும் பலம் கொடுத்துக் கொண்டு உள்ளது. இ.ண்.டி. கூட்டணி கட்சியினர் தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் குற்றத்தை செய்தவர்கள். திமுக காங்கிரஸ் செய்த தப்புக்கும் பாவத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
பா.ஜ.க., அரசு பெண்களுக்கான அரசு. பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசு. இ.ண்.டி. கூட்டணிக்கு பெண்களை ஏமாற்ற மட்டும் தான் தெரியும். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கும் அரசு பா.ஜ.க., அரசு.
தமிழ்மொழியை கற்றுக் கொள்ள முடியவில்லை என வருத்தம் கொள்கிறேன். கற்காதது மிகப்பெரிய குறையாக உள்ளது. தொழில்நுட்ப உதவியுடன் தமிழ் மொழியில் பேசுவேன். இனிமேல் சமூக ஊடகங்களில், நமோ செயலியில் தமிழில் என்னுடைய குரலில் பேசுவேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடியின் உரையை தமிழில் எப்படி கேட்பது என்பது பற்றி தலைவர் அண்ணாமலை விளக்கம்:
பாரதப் பிரதமர் அவர்கள் தமிழ் பேசுவதை நீங்கள் எல்லாம் கேட்க வேண்டும் இல்லையா? இன்று பிரதமர் அவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (செயற்கை நுண்ணறிவை) நமோ இன் தமிழ் செயலியில், பிரதமரின் பேச்சு அவரின் குரலில் அதே உணர்வில் வீடியோவாக வரும்.
பிரதமர் இந்த நிகழ்ச்சியை பேசி முடித்த பின்னர், அவர் எப்படி பேசினாரோ அதே பாணியில் தமிழிலும் நீங்கள் கேட்கலாம். எந்த உணர்வுகளில் பேசினாரா அதே உணர்வோடு வீடியோவில் தமிழிலும் கேட்கலாம்.
நாம் செய்ய வேண்டியது இதனை எல்லா சமூக வலைத்தளப்பக்கத்திலும் பிரதமர் அவர்களின் வீடியோவை எடுத்துச்செல்ல வேண்டும். தமிழக மக்களுக்கு வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் தளத்தின் வாயிலாக எடுத்துச்சொல்ல வேண்டும்.
நமது பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பிரதமர் அவர்களின் ஒவ்வொரு பேச்சும் தமிழில் இடம்பெறும். எந்த மாநிலத்தில் பேசினாலும் அதன் முக்கிய விஷயங்களை தமிழில் மொழி பெயர்த்து செயற்கை நுண்ணறிவோடு சாயங்காலத்திற்குள் இருக்கும். அதனால் நீங்கள் அனைவரும் பிரதமரின் தமிழ்நாட்டுப் பேச்சையும் கேட்கலாம், வேறு மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேசுவதையும் தமிழில் கேட்கலாம். இதை அனைத்தையும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என பிரதமர் சார்பாக உங்களிடம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.
அப்போது பிரதமர் மீண்டும் பேசும்போது; தமிழ் செயலியை பயன்படுத்தி கேட்பீர்களா! கேட்பீர்களா என கம்பீரமாக கேட்டார். அதற்கு தொண்டர்கள் அனைவரும் ஆம் கேட்போம் என சத்தத்துடன் பிரதமருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.