தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தெலுங்கானா மாநில மக்களுக்காக இரவு பகலாக பணியாற்றி நல்ல பெயரைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து 2021ஆ-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி, கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனால் இரண்டு மாநில மக்களின் வளர்ச்சிக்காக திறம்பட பணியாற்றினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து ,அரசியல் பொது வாழ்க்கைக்கு திரும்பப் போவதாக தகவல்கள் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் வெளியானது. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய மாநில ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அனுப்பினார். அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கு திரும்பினார்.
இந்த நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக தமிழிசை சவுந்தரராஜன் பாஜக தலைமையகமான கமலாலயம் வந்தார். அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழங்கினார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் கிஷன்ரெட்டி மற்றும் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.