அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக போட்டியிடவில்லை. மாற்றத்திற்காக நான் போட்டியிடுகிறேன் என தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று (மார்ச் 26) நடந்தது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மற்றும் பாஜக தொண்டர்கள் என பலரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
கொங்கு மண்டல விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும். வட அமெரிக்காவில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி வரியை நீக்கியதன் மூலம் குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் நிலத்தடி நீர்மட்டம் 13 மீட்டர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்திருக்கிறது. மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 400 எம்.பிக்களை பெற வேண்டும். 400 எம்.பி.,க்களை பெற்றால் நதிநீர் இணைப்பை செயல்படுத்தலாம். அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக போட்டியிடவில்லை. மாற்றத்திற்காக நான் போட்டியிடுகிறேன். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் குழாய் மூலம் காஸ் விநியோகம் செய்யப்படும்.
மேலும், எந்திரவியல் துறை, விவசாயம், நெசவு உள்ளிட்ட தொழில்கள் சிறந்து விளங்கும் கோவை பாராளுமன்றத் தொகுதிக்கான நலத்திட்டங்களைப் பெற்றுத் தர, பாராளுமன்ற உறுப்பினருக்கு, அவை குறித்த முறையான தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்.
குறிப்பாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 4.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடையும் ஆனைமலை நல்லாறு திட்டம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கான நிதி உதவியை, மாநில அரசும் வழங்கவில்லை. மத்திய அரசிடமும் வலியுறுத்திப் பெறவில்லை.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் தேவைப்படும் சுமார் 10,000 கோடி ரூபாய் நிதி உதவியை, இத்தனை ஆண்டுகளாகப் பெற்றுத் தராமல், ஆனைமலை நல்லாறு திட்டத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருந்தது இதுவரை ஆட்சி செய்த தமிழக அரசுகள். மத்திய அரசிடம் இருந்து இதற்கான நிதியை உரிமையாக வலியுறுத்திப் பெற முடியுமென்றால், அது நமது பாஜக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் மட்டும்தான் முடியும்.
இதுபோன்று, தமிழக அரசு கிடப்பில் போட்டிருக்கும், தொகுதிக்கான நலத்திட்டங்கள் அனைத்தையும் மத்திய அரசின் உதவியோடு நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்வேன்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.