நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான டாக்டர் எல்.முருகன் நேற்று (மார்ச் 25) வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்காக ஏராளமான பாஜக தொண்டர்கள் கூடியிருந்தனர்.இதனை பொறுத்துக் கொள்ள இயலாத திமுக அரசின் ஏவல்துறை , தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கு கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொண்டர்களின் ஆரவாரத்தை கண்டு திமுக, காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்பொழுது தொண்டர்கள் கலைந்து செல்ல முற்படாததால் தொண்டர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் பாஜக தொண்டர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளருக்கும் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதை விட , தொண்டர்கள் மீது தடியடி நடத்தும் அராஜக முறையை கையில் எடுத்துள்ள காவல்துறையினரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் திமுகவின் ஏவல் துறையாக செயல்படும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய இணை அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை இந்த சம்பவம் தெளிவாகக் காட்டுகிறது. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இந்த அடக்குமுறைக்கு என்ன பதில் கூற போகிறார்..?
மத்திய இணை அமைச்சருக்கு பாதுகாப்பு இல்லை, தமிழக பாஜக தலைவருக்கு பாதுகாப்பு இல்லை, தொண்டர்களுக்கு (மக்களுக்கு) பாதுகாப்பு இல்லை, ஆனால் தமிழக முதல்வர் பொறுத்தவரையில் தமிழகம் ஒரு அமைதிப் பூங்கா என குறிப்பிட்டுள்ளார்.