தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனியாகவும், மற்ற கட்சிகள் பல்வேறு அணிகளாகவும் தேர்தலை சந்திக்கின்றன . இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 20ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது.
இதில் 25-ம் தேதி நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். நேற்றும் பா.ஜ.க., மற்றும் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் ஆர்வமுடன் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகம், புதுச்சேரி முழுவதும் நேற்று வரை 780 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் இன்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வமுடன் பலர் வந்திருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது என்பதால் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை தேர்தல் அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில் அப்போது வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அனைவருக்கும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் இதுவரை 40 தொகுதிகளிலும் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாளை (வியாழக்கிழமை) வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30-ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மதியம் 3 மணிவரை மனுக்களை வாபஸ் பெறலாம்.
30-ந்தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்போது சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஒரே சின்னத்தை 2 சுயேட்சைகள் கேட்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.