ரெய்டு நடந்த நிறுவனங்களிடம் அதிக நிதி பெற்றது எதிர்க்கட்சிகளே! வானதி சீனிவாசன்!

அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிறுவனங்களிடம் அதிகமான நிதி பெற்றது எதிர்க்கட்சிகளே என தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க., எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவைவிட அதிக நிதி பெற்றுவிட்டு பாஜக மீது அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

‘‘தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, பாஜக மீது எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றன. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, போன்ற அமைப்புகளைக் கொண்டு சோதனை நடத்தி பெரு நிறுவனங்களிடம் இருந்து பாஜக பெருமளவு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளதாக எவ்வித ஆதாரங்களும் இன்றி குற்றம்சாட்டி வருகின்றன.

கடந்த 2014 முதல் 2022 வரை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ சுமார் 3,000 நிறுவனங்களில் சோதனை நடத்தியுள்ளது. அதில், 26 நிறுவனங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. அந்த 26ல் 16 நிறுவனங்கள் மட்டுமே, அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற மத்திய அரசின் அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு உள்ளான நிறுவனங்களிடம் இருந்து பாஜக 37 சதவீத நிதியைத்தான் பெற்றுள்ளது. ஆனால், பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் 63 சதவீதம் நிதி பெற்றுள்ளன.

மொத்தமாக வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் பாஜக பெற்றது 47 சதவீதம் மட்டுமே. ஆனால், எதிர்க்கட்சிகள் 53 சதவீத தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளன. 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக ஒரு லாட்டரி நிறுவனத்திடம் இருந்து மட்டும் ரூ.509 கோடி பெற்றுள்ளது. அதோடு ஒப்பிடும்போது 450 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக பெற்ற நிதி மிகமிக குறைவுதான். இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி வெளியிட்ட ஆவணங்களில் உள்ளன.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, சோதனைக்கு உள்ளான நிறுவனங்களிடம் எதிர்க்கட்சிகள் அதிக நிதி பெற்றுள்ளதால், அந்நிறுவனங்களை எதிர்க்கட்சிகள் மிரட்டியிருக்க வேண்டும். அல்லது உதவி செய்கிறோம் எனக்கூறி நிதி பெற்றிருக்க வேண்டும். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ சோதனைக்கு உள்ளான நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

தேர்தலில் பல்லாயிரம் கோடி கணக்கில் வராத கருப்புப் பணம் புழங்குவதை தடுக்கவே தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. இதில் வங்கிகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு பணம் செல்வதால் அது கணக்கில்தான் இருக்கும். ஆனால், நிதி கொடுக்கும் நிறுவனங்களின் பாதுகாப்பு கருதியே, தேர்தல் பத்திரங்களை யார் வாங்கியது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.

தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பாஜக நினைத்திருந்தால், கணக்கில் வராமல் எவ்வளவு பணம் வேண்டுமானால் நிதி பெற்றிருக்கலாம். ஆனால், ஊழல் ஒழிப்பில், கருப்புப் பண ஒழிப்பில் தீவிரமாக இருப்பதால் சட்டத்திற்கு உட்பட்ட நேர்மையான வழியில் நிதி பெற வேண்டும் என்பதற்காகவே தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், அதிலும் பாஜகவை விட அதிக நிதி பெற்று விட்டு பாஜகவை நோக்கிய அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

. மக்களே நேரடியாக உண்மையை அறிய ஆவணங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உண்மை என்ன என்பதை மக்கள் அறிவார்கள். அதனால்தான் பாஜகவை இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தினார்கள். மூன்றாவது முறையாகவும் ஆட்சியில் அமர்த்த இருக்கிறார்கள். எனவே, எதிர்க்கட்சிகளின் அவதூறு பிரசாரத்தை மக்கள் முறியடிப்பார்கள்.

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top