வாரிசு அரசியலால் உயிரிழந்த மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி?.

ஈரோடு தொகுதி மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்று கடந்த சில நாட்களாக மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

திமுக கூட்டணியில் இடம் பெற்ற மதிமுகவுக்கு திருச்சி தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. அதில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. காலம், காலமாக மதிமுகவில் உழைத்துக் கொண்டிருந்த பலருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வைகோவை நம்பி பலர் தங்களது வாழ்க்கையை இழந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஈரோடு மக்களவை தொகுதி எம்.பி.யாக திமுக சின்னத்தில் போட்டியிட்டு கடந்த முறை வெற்றிப் பெற்றவர் கணேசமூர்த்தி. இவர் தொகுதியில் எந்தவிதமான பணிகளையும் செய்யவில்லை என்று தொகுதி மக்களே புலம்பி வருகின்றனர்.

இதற்கிடையே தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ஈரோட்டில் மீண்டும் போட்டியிடுவதற்காக வைகோவிடம், கணேசமூர்த்தி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனது மகன் துரை வைகோவை எம்.பி.யாக்குவதற்கு வைகோ தீவிர முயற்சி செய்து வந்தார். அதன்படி திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியை வாங்கி தனது மகனுக்கு வைகோ வழங்கிவிட்டார்.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த கணேசமூர்த்தி, ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் கடந்த 24 ஆம் தேதி காலை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தற்கொலை முயற்சி செய்திருந்தார்.

இந்த தகவலை தனது மகனிடமும் அவர் தெரிவித்திருந்தார். உடனே ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கிருந்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் உடல்நிலை மோசமாகவே இருந்தது. மருத்துவர்களும் அவர் உயிர் பிழைக்க 50 சதவீதம் மட்டுமே வாய்ப்பு என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை கணேசமூர்த்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கணேசமூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரான சென்னிமலையை அடுத்த குமாரவலசு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது தோட்டத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கடைசி வரை மதிமுகவில் உறுப்பினராகவும் நிர்வாகியாகவும் இருந்த கணேசமூர்த்தியை தனது மகனுக்காக வைகோ, கைவிட்டு விட்டாரே என ஈரோடு மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். வாரிசு அரசியலால் ஒரு எம்.பி., உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top