தருமபுரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். அவருக்கு பெண்கள் மத்தியில் நல்ல ஆதரவு பெருகி வருகிறது.
அதன்படி இன்று (மார்ச் 28) தருமபுரி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட இண்டூர் பகுதியில் சௌமியா அன்புமணி மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தொழிலாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அதன் பின்னர் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது சௌமியா அன்புமணி அவர்களிடம் உரையாற்றியதாவது:
தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது. இப்பகுதி மதுவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பாதிப்பதை விட மதுக்கடையில்தான் அதிகமான பணத்தை கொடுக்கின்றனர். இதற்கு எல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது என்று தெரியவில்லை. நீங்கள்தான் சம்பாதித்து கொடுக்கிறீர்களா என்ற கேள்வியை எழுப்பினார். அப்போது அங்கிருந்த பெண் தொழிலாளர்கள் சிரித்தனர்.
பெண்கள் சம்பாதிக்கும் பணத்தை பலர் மதுக்கடையில் கொண்டுபோய் கொடுத்து விடுகின்றனர். பாமக ஆட்சிக்கு வரும்போது மதுக்கடையை மூடிவிடுவோம் என்றார்.
மேலும், எனது கணவர் அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும்போது தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. அனைத்து வசதிகளும் இங்கே வந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ வசதி பெறுகின்றனர்.
எங்களது நெஞ்சுக்கு நெருக்கமான ஊர் என்றால் தருமபுரி என்று சொல்வோம். நான் எனது பிறந்த ஊரை விட தருமபுரிக்குதான் அதிகமாக வந்துள்ளேன். எனவே தருமபுரி மண்ணுக்காக நிறைய செய்யனும் என்று எதிர்பார்க்கிறேன்.
தருமபுரி தொகுதிக்கு முதல் பெண் வேட்பாளராக நான் நிற்கிறேன். எனவே பெண்களாகிய நீங்கள் வீட்டில் அனைவரிடமும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும். உங்களின் பெண்ணாக நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சௌமியா அன்புமணி பேசினார்.
இந்த நிகழ்வின்போது பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., தருமபுரி பாமக எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் மற்றும் பாமக நிர்வாகிகளான சாந்தமூர்த்தி, பெரியசாமி, சக்தி, மற்றும் பாஜக நிர்வாகிகள், ஆனந்த குமார், முருகன், பொன்னுசாமி, மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் பங்கேற்றனர் .