கச்சத்தீவை தாரைவார்த்த காங்கிரஸ்: ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அண்ணாமலை

‘‘கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் தான்; 1974ல் அன்றைய காலகட்டத்தில், வெளியுறவு துறை அமைச்சகமும், அப்போதைய முதல்வர் கருணாநிதியும் என்ன பேசினர் என்ற ஆவணங்கள் கிடைத்துள்ளன. இவற்றை எந்தவொரு குடிமகன் படித்தாலும், ரத்தம் கொதிக்கும்,’’ என்று தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நேற்று (மார்ச் 31) தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

சில வாரங்களுக்கு முன் மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கச்சத்தீவு தொடர்பான ஆவணங்கள் குறித்து கேட்டிருந்தேன். வெளியுறவு அமைச்சகம் வாயிலாக இரண்டு ஆவணங்கள் வழங்கப்பட்டன. பொது வெளியில் இல்லாத ஆவணங்களை வழங்கினர்.

அதாவது கச்சத்தீவு தொடர்பாக 1974ல் அன்றைய காலகட்டத்தில் வெளியுறவு துறை அமைச்சகமும், அப்போதைய முதல்வர் கருணாநிதியும் என்ன பேசினர் என்ற ஆவணங்கள் கிடைத்துள்ளன. இவற்றை எந்தவொரு குடிமகன் படித்தாலும் ரத்தம் கொதிக்கும். அந்தளவுக்கு கச்சத்தீவை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி பல சதி வேலைகளை செய்து தாரை வார்த்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை கச்சத்தீவு என்பது மிகவும் முக்கியம். நாட்டின் எல்லைப் பரப்பை தீர்மானிக்கக்கூடிய தீவு. அந்த தீவை கொடுத்தால் நம் எல்லையை நாமே சுருக்கிக் கொள்கிறோம்.

கடந்த 1968ல் கமிட்டி குறிப்புகளை படித்தால், ராமநாதபுரத்து ராஜா, கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து ஜமீன்தார் உரிமை பெறுகிறார். 1875 முதல் 1948 வரை எந்த பிரச்னையும் இல்லாமல், கச்சத்தீவு பகுதியில் முத்து எல்லாம் எடுத்துள்ளோம். யாருக்கும் வரி கொடுக்கவில்லை; யாரிடமும் பிரச்னை கிடையாது.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின் அவர்கள் எதிர்க்க ஆரம்பிக்கின்றனர். குறிப்பாக அப்பகுதியில் இலங்கை விமானப்படையினர், துப்பாக்கி சுடும் பயிற்சியை நடத்தக் கேட்கின்றனர்; இந்தியா போகும் போது, எதிர்க்கின்றனர். அப்போது இந்தியாவின் நிலைமையை பார்க்கும் போது கச்சத்தீவு நம்முடையது என்று உள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமராக நேரு வருகிறார்; கடந்த 1961ல் ஒரு குறிப்பு எழுதுகிறார். மக்களவையில் கச்சத்தீவு தொடர்பான கேள்விகள் எல்லாம் வருகின்றன. பிரதமர் நேரு எழுதிய குறிப்பில், ‘இந்த குட்டித் தீவுக்கு நான் எந்த விதமான மரியாதை கொடுக்கப் போவதும் கிடையாது; எந்தவித பிரச்னையும் இல்லாமல் இன்னொருவருக்கு கொடுக்க தயாராக இருக்கிறேன்.

‘இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் தீர்க்கப்படாமல் இருப்பது எனக்கு பிடிக்காது. அதனால் இலங்கை பக்கம் உள்ளது. அவர்களிடம் பிரச்னை குறித்து கேட்கப் போவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக 1961 மே 10ல் எழுதிய குறிப்பு உள்ளது.

முக்கியமான மனிதர்கள் எல்லாம் சொல்கின்றனர். மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலர் கிருஷ்ணா ராவ் 1960ல் சொல்கிறார்; கச்சத்தீவு நம்முடையது; பிரச்னையை தீர்க்க வேண்டும் என்கிறார்.

கடந்த 1958ல் நம் அட்டர்னி ஜெனரல் கொடுக்க வேண்டாம் என்று சொல்லியுள்ளார். 1961ல் காமன்வெல்த் செயலர் சொல்கிறார். இலங்கையில் அரசியல் சூழல் சரியில்லை; அதனால் பேசப் போவதில்லை என்று தள்ளி போட்டுக் கொண்டே செல்கின்றனர்.

எந்த காரணத்துக்கும் கூட நேரு அரசு, காங்கிரஸ் அரசு, கச்சத்தீவு பிரச்னையை தீர்க்க முன் வரவில்லை. 1948ம் ஆண்டு வரை பிரச்னையில்லாமல் இருந்தது. கச்சத்தீவு எங்களுடையது என்று கேட்கும் வரை அனுமதிக்கின்றனர்.

கொஞ்சம் கொஞ்மாக இலங்கை துப்பாக்கி சுடும் களமாக கச்சத்தீவை பயன்படுத்த பார்க்கின்றனர். மிக முக்கியமான விஷயம் கருணாநிதி கச்சத்தீவுக்கு செய்த துரோகம். இது குறித்து இன்று பேச விரும்பவில்லை.

இன்று முதல் பகுதி வெளியாகி உள்ளது. நாளை வெளியான பின் இரண்டாவது பகுதியில் கருணாநிதி என்ன சொன்னார்; என்ன  ஆலோசனை நடந்தது. குறிப்பில் என்ன உள்ளது என்று பேசுவோம்.

நாட்டின் இறையாண்மையை, எல்லையை சுருக்கியது காங்கிரஸ். கச்சத்தீவை கொடுத்த பின் எல்லை சுருங்கியது. நேரு தொடர்ச்சியாக, கச்சத்தீவு ஒரு சின்ன தீவு; அந்த தீவு மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது என்கிறார்.

ஆனால் கிருஷ்ணா ராவ், அட்டர்னி ஜெனரல், இதை போராடி இந்தியா பெற வேண்டும் என்று இருந்தனர். 1875 முதல் 1948 வரை கச்சத்தீவு ஒரு பிரச்னையும் இல்லாமல் இருந்தது.

இதை பிரதமர் மோடி, நாகர்கோவிலில் ஒரு குறிப்பில் சொல்லியிருந்தார். நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை யார் தாரை வார்த்தனர் என்று தெரியும் போது, நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கட்சி பொதுக்கூட்டத்தில் பேசி சென்றார்.

காங்கிரஸ் எப்படி சதி செய்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவுக்கு உள்ள உரிமையை, 1960 முதல் ஒவ்வொரு செங்கல்லாக விட்டுக் கொடுத்தது. 1968ல் இந்திராவும், செனநாயக்கும் ரகசிய ஒப்பந்தம் செய்து ஆறு ஆண்டுகள் கழித்து 1974ல் நடைமுறைக்கு கொண்டு வருகின்றனர்.

முத்துராமலிங்க தேவர் வழியில் வந்த ராமநாதபுரம் எம்.பி., மூக்கையா தேவர் போராடினார். அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தார். அவரின் பெயரை இன்று மறைத்து விட்டனர். அதன் பிறகு வாஜ்பாய் அதை மக்களவையில் கேள்வி கேட்டார்.

வாஜ்பாய் அதே நாடாளுமன்றத்தில் இந்திராவை பார்த்து கேட்டார்: ‘எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறீர்கள்; இந்த நாடு உங்களை மன்னிக்குமா? கச்சத்தீவை தாரை வார்த்திருக்கிறீர்களே’ என்று.

நாட்டு மக்கள் இதை மறந்துவிடக்கூடாது. காங்கிரஸ் எவ்வளவு துரோகம் செய்தது என்பதை நாம் இன்றைக்கு பேசுகிறோம்; நாளை தி.மு.க., எவ்வளவு துரோகம் செய்திருக்கிறது. குறிப்பாக, 1974ல் முதல்வராக இருந்த கருணாநிதி எப்படி கூட்டுச்சதி செய்தார் என்று பேசலாம்.

கடந்த 1974ல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது, ‘ஆர்ட்டிகிள் – 6’ என்ன சொன்னதென்றால் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தாலும் கூட நம் மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்தலாம் என்கிறது.

கச்சத்தீவுக்கு மீனவர்கள் போகலாம்; மீன் வலையை உலர்த்தலாம்; மீன் பிடிக்கலாம். அதன் பின், மீன் வலையை திரும்ப கொண்டு வந்து விட வேண்டும்.

இலங்கைக்கு தாரை வார்த்திருந்தாலும் கூட, மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்தலாம் என்பதற்கு ஆர்ட்டிகிள் – 6 இருந்தது. திருட்டுத்தனமாக எமர்ஜென்சிக்கு முன்னர் ஆர்ட்டிகிள் 6ஐ நைசாக எடுத்துவிட்டனர்.

எவ்வளவு ‘பிராடுத்தனம்’ செய்துள்ளனர் என்றால், தமிழக மக்களை சமாதானப்படுத்துவதற்காக, தீவை தான் கொடுத்துவிட்டனர்; அங்கு சர்ச் மட்டும் தான் உள்ளது.

மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை என்று சொல்லிவிட்டனர். ஆனால் கவலைப்படாதீங்க… மீனவ சொந்தங்கள் கச்சத்தீவை பயன்படுத்திக் கொள்ளலாம்; கவலையில்லை என்றனர். அந்த தீவுக்கு சென்று வலைகளை உலர்த்தலாம் என்று சொல்லியதால் தான், 1974ல் கருணாநிதி ஆட்சி காலத்தில் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கவில்லை.

கருணாநிதியின் பகுதியை சொல்லும் போது உங்களுக்கு தெரியும்; எந்தளவுக்கு திருட்டுத்தனம் செய்துள்ளனர் என்று. 1974 முடிந்தது, 1975 முடிந்தது. அதன் பின்னர் தான், ஆர்ட்டிகிள் – 6ஐ திருட்டுத்தனமாக எடுத்துள்ளனர்.

இன்றைக்கு அந்த தீவு முழுமையாக இலங்கைக்கு சொந்தம். ஆர்ட்டிகிள் – 6 இல்லாததால் எந்த மீனவனும் கச்சத்தீவு பக்கத்தில் போக முடியாது; கச்சத்தீவில் இறங்க முடியாது.

மீனவர்களின் முப்பாட்டன், பாட்டன், தாத்தா என, 1,000 ஆண்டுகளாக எல்லை வரை சென்று மீன் பிடித்தவர்கள். அரசியல் கட்சிகள் சதி செய்து எல்லையை சுருக்கியதால் தான், இன்று பிரச்னை. மீனவ சொந்தங்கள் எல்லை வரை சென்று மீன் பிடிக்க முடியவில்லை.
பல்லடத்தில் ஒரு கிராமப்பகுதியில் ஒரு தோட்டத்தில் அமர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம். பத்திரிகையாளர்களுக்கு அன்பான வேண்டுகோள், இந்த செய்தியை எல்லாரும் கொடுக்க வேண்டும்.

கருணாநிதி பற்றி இரண்டாவது பகுதியில் பேசுகிறேன். எதற்காக இந்திரா இதை செய்தார்; நேரு காலத்திலேயே கச்சத்தீவை விட்டுக்கொடுத்தாகிவிட்டது. 1968ல், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கின்றனர்; ரகசியமாக என்ன பேசினீர்கள்; செனநாயகேவோடு என்ன ஒப்பந்தம் போட்டீர்கள், சொல்லுங்கள் என்று இந்திராவிடம் கேட்டனர். அப்போதெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை; 1974ல் கச்சத்தீவை கொடுத்துவிட்டனர்.

நாளை மக்கள் மன்றத்தில் இது தொடர்பான விரிவான விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் வழங்கப்படும். தமிழகத்தில் முதல்முறையாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாஜக மாநில தலைவராகிய நான் சொன்னேன்; கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று.

அதன் தொடர் முயற்சியாக, இன்று ஒரு படி எடுத்து வைத்துள்ளேன். கச்சத்தீவை எப்படி கொடுத்தோம் என்பது மக்களுக்கு தெரிந்தால் தானே, அடுத்து எப்படி திருப்பி வாங்குவது என்று பேச முடியும். கச்சத்தீவை எப்படி கொடுத்தனர்; யார் கொடுத்தனர்; ஏன் கொடுத்தனர் என்று மக்கள் யாருக்கும் எதுவும் தெரியாது. கச்சத்தீவு திரும்ப வர வேண்டும் என்பதில் பா.ஜ.க., உறுதியாக உள்ளது; இல்லையென்றால், மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு என்பது இல்லை.

நாங்கள் சண்டை போடுவோம். முன்பெல்லாம் 30 நாள், 40 நாள் வைத்திருப்பர்; இப்போதெல்லாம் கைது செய்தவர்களை, 15 நாட்களில் ரிலீஸ் செய்து அழைத்து வருகிறோம். இன்னும் எத்தனை நாட்கள் போராடுவது!

இதற்கு ஒரு நிரந்தர தீர்வு என்பது, எல்லையை திரும்பக் கொண்டு வருவதே. நம் கடல் பகுதியான ராமநாதபுரத்திலிருந்து 6 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு கற்கள்; மீன் பிடிக்க முடியாது. 6 நாட்டிக்கல் மைல் கடந்து சென்று தான் மீன் பிடிக்க வேண்டும்; அதற்குள் கச்சத்தீவு வந்து விடுகிறது.

கச்சத்தீவுக்கு பின் நெடுந்தீவு வந்து விடுகிறது. அந்த காலத்தில் நெடுந்தீவு வரை சென்றோம். நம் ராமநாதபுரம் சுவாமிக்கு, நெடுந்தீவிலிருந்து பால் வந்தது. அந்த பாலில் தான் தினமும் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

கச்சத்தீவை மீட்பது பா.ஜ.க.வின் கோரிக்கை மட்டுமல்ல; கச்சத்தீவை மீட்க கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறோம். காங்கிரஸ் 10 ஆண்டுகள்; அதற்கு முன் பல ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர்.

கச்சத்தீவு குறித்து தமிழகத்திலிருந்து பேசிய முதல் நபர் நான். அதற்கு பின் ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டாலினுக்கு கச்சத்தீவு குறித்து சொல்வதற்கு அருகதையே இல்லை.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top