‘‘ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மீதும், வாங்குவோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்,’’ என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதும் குற்றம், அதை வாங்குவதும் குற்றம். ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மீதும், வாங்குவோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகம், இரவு 10:00 மணிக்கு மேல் பிரசாரம் செய்தல் போன்றவை குறித்து, பொதுமக்கள், ‘சி விஜில்’ மொபைல் ஆப்ஸ் வழியாக புகார் அளிக்கலாம். தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க, பொதுமக்கள் முன் வர வேண்டும்.
இதுவரை பணம் கொடுத்ததாக புகார் வரவில்லை. ஒன்றிரண்டு புகார்கள் வந்தன; அவையும் பழைய வீடியோக்கள். தமிழகத்தில் பதற்றமான ஓட்டுச் சாவடிகளாக, 8,050; கண்காணிக்க வேண்டிய ஓட்டுச்சாவடிகளாக 181 கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
வாக்காளர்களுக்கு, ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 13.08 லட்சம் பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வரும் 13ம் தேதிக்குள் வழங்கப்படும்.
இவ்வாறு சத்யபிரதா சாஹு கூறினார்.