விடியல் என்ற பெயரில் மக்களை சுடுகாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் ஸ்டாலின் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரோடு பாராளுமன்றத் தொகுதி சித்தோடு பகுதியில் நேற்று (ஏப்ரல் 04) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயகுமாருக்கு ஆதரவாக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
ஈரோடு பாராளுமன்றத் தொகுதி சித்தோடு பகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் சார்பில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அண்ணன் விஜயகுமார் அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, பொதுமக்கள் பெரும் திரளெனக் கூடி ஆதரவளிப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது..
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் அண்ணன் விஜயகுமார் அவர்களைத் தேர்ந்தெடுத்தால் மட்டும்தான், ஈரோடு பாராளுமன்றத் தொகுதி வளர்ச்சி பெறும். நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நேரடிப் பார்வையில், விவசாயம், தொழில்துறை என அனைத்துத் துறைகளும் செழிக்கும். அடித்தட்டு மக்களுக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். திமுகவின் மூன்று அமைச்சர்கள் இருக்கும் ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில், கடந்த 33 மாதங்களாக, திமுக அமைச்சர்களால் செய்ய முடியாத வளர்ச்சிப் பணிகளைத் திமுக பாராளுமன்ற உறுப்பினரால் எப்படிச் செய்ய முடியும்? நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி.
இந்த நிலையில், எதிர்க் கட்சிக் கூட்டணிகளுக்கு வாக்களிப்பது என்பது, நமது வாக்குகளை வீணடிப்பதாகும். நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் விஜயகுமார் அவர்கள், பவானியில் இருந்து கோவை வரை, தேசிய நெடுஞ்சாலையில், பத்தாயிரம் மரங்கள் நட்டு, 6 முறை பசுமைக் காவலர் விருது வென்றிருக்கிறார். மக்கள் சேவகன் என்ற அடிப்படைத் தகுதி படைத்தவர். அதிகாரம் இல்லாமல், ஒரு சாமானிய மனிதனாக இத்தனை பணிகளை மேற்கொண்ட அண்ணன் விஜயகுமார் அவர்களுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அதிகாரம் கிடைத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஈரோடு தொகுதிக்காக அவர் நிச்சயம் அனைத்து நலத்திட்டங்களையும் மேற்கொள்வார்.
ஈரோடில் அதிகமாக இருக்கும் கேன்சர் நோய்க்குத் தீர்வாக, ஒருங்கிணைந்த கேன்சர் மருத்துவமனையைக் கொண்டு வருவோம். சாயப்பட்டறை பிரச்சினைக்குத் தீர்வு கொண்டு வருவோம். இவை ஈரோடு தொகுதியின் முக்கியப் பிரச்சினைகளுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுதியான வாக்குறுதிகள். சாமானிய மக்களுக்கான பணிகள் செய்யும் வேட்பாளர் அண்ணன் விஜயகுமார் அவர்களுக்கு, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும், இரண்டு மடங்கு அதிகமான உழைப்பைக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மாற்று அரசியல் உருவாக, 2026 ஆம் ஆண்டு, நேர்மையான ஆட்சி மாற்றம் வேண்டுமென்றால், அதற்கு, இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொண்டர்களின் கடும் உழைப்பு வேண்டும்.
கடந்த பத்து ஆண்டுகள் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியில், நாட்டின் வளர்ச்சியோடு, தனிமனித வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும், பிரதமரின் வீடு திட்டத்தில் ரூ.2,63,000 மானியத்தோடு, 37,838 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 95,782 விவசாயிகளுக்கு, ஒரு தவணைக்கு ரூ.2,000 வீதம், 15 தவணைகளில், 30,000 ரூபாய் கொடுத்திருக்கிறோம். ரூ.5 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு மூலம், 1,84,153 பேர் பலனடைந்திருக்கிறார்கள். ரூ.300 சமையல் எரிவாயு மானியம், நமது தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது.
ஆனால், பிரதமர் தமிழகத்துக்கு ஒரு ரூபாயில் 29 பைசா தான் தருகிறார் என்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மக்கள் பணத்தை நேரடியாக மக்களுக்குத்தான் கொடுக்க முடியும். கோபாலபுரக் குடும்பம் கொள்ளையடிக்கவா கொடுக்க முடியும்? சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் நலத்திட்டங்களை, தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்குக் கொடுத்திருக்கிறோம். உதயநிதி ஸ்டாலினுக்கு அடிப்படை அறிவு இருந்தால், இப்படிப் பேசுவாரா? இனியும் நமது பிரதமர் அவர்களைத் தவறாகப் பேசினால், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட உதயநிதியை கஞ்சா உதயநிதி என்று அழைக்கலாமா?
முதலமைச்சர் கீழ்பவானி வாய்க்கால் மூலமாக மொத்தப் பாசனம் 3 லட்சம் ஏக்கர் என்கிறார். ஆனால், 2 லட்சம் ஏக்கர் தான் பாசனம் நடைபெறுகிறது. நாட்டு நடப்பு கூடத் தெரியாமல் இருக்கிறார் முதலமைச்சர். விடியல் என்ற பெயரில் மக்களை சுடுகாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். திமுக அரசு, மின்சாரக் கட்டண உயர்வு. நிலைக்கட்டணம் உயர்வு, சூரிய ஓளி மின்சாரக் கட்டண உயர்வு. பால் விலை, சொத்து வரி, தண்ணீர் வரி, என அனைத்தையும் விலை உயர்த்தி, பொதுமக்கள் வயிற்றில் அடித்திருக்கிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட ஊழலின்றி நல்லாட்சி நடத்தி வரும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் பெரும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த, ஈரோட்டில், மக்களுக்கான வேட்பாளர் அண்ணன் விஜயகுமார் அவர்களுக்கு, சைக்கிள் சின்னத்தில் வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் ஜனநாயக தார்மீகக் கடமை ஆகும். கட்சி வேறுபாடின்றி, ஈரோடு பொதுமக்கள் அனைவரும் சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து, அண்ணன் விஜயகுமார் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.