தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், பா.ஜ.க., வேட்பாளர் மாதவி லதாவை, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.
தெலுங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
ஐதராபாத் மக்களவைத் தொகுதியில், ஏ.ஐ.எம். ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியின் குடும்பம், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி பெற்று வருகிறது. அத்தொகுதியின் சிட்டிங் எம்.பி.,யாக அசாதுதீன் ஓவைசி உள்ளார். ஐதராபாத் தொகுதி, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஐதராபாத் தொகுதியில் அசாதுதீன் ஓவைசியை எதிர்த்து, பா.ஜ.க., சார்பில் பரதநாட்டிய கலைஞரும், தொழில்முனைவோருமான மாதவி லதா 49, போட்டியிடுகிறார். இவர் இத்தொகுதியில் பா.ஜ.க., சார்பில் நிறுத்தப்பட்டுள்ள முதல் பெண் வேட்பாளர்.
சமீபத்தில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கொம்பெல்லா மாதவி லதா கூறுகையில், ‘என் சமூகப் பணியின் காரணமாகவே, ஐதராபாதில் அசாதுதீன் ஓவைசியை எதிர்த்து போட்டியிட, பிரதமர் நரேந்திர மோடி எனக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார். அவர் ஒரு மகா யோகி.
‘பிரதமர் மோடி மட்டுமே வெளிப்படையான அரசியல் செய்து வருகிறார். வரும் தேர்தலில், 1.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அசாதுதீன் ஓவைசி தோற்பார். 40 ஆண்டுகளாக போலி வாக்கு மூலமாக அவர் வெற்றி பெற்று விட்டார். இந்த முறை அது நடக்காது’ என்றார்.
இந்த வீடியோ பதிவின் இணைப்பை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, ‘மாதவி லதா, நீங்கள் உறுதியான புள்ளி விபரங்களை எடுத்து வைத்துள்ளீர்கள். உங்களுக்கு வாழ்த்துகள். இந்த வீடியோ மறுஒளிபரப்பு செய்யப்படும் போது அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்’ என, குறிப்பிட்டுள்ளார்.