திராவிட மாடல் அவலம் : கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வந்த மலைவாழ் மக்கள்!

உடுமலை அருகே கரடு, முரடான மலைப்பாதையில் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வந்த மலைவாழ் மக்கள், சாலை வசதி செய்து தராவிட்டால், ‘அதிகாரிகளையும், அரசியல் கட்சியினரையும் ஊருக்குள் நுழைய விடமாட்டோம்; தேர்தலை புறக்கணிப்போம்’ என ஆவேசமாக கூறினர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக பகுதியில், குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு என 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.

இங்கு 5,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் சாலை வசதி, குடிநீர், வீடு என அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மருத்துவம் உள்ளிட்ட அவசிய தேவைக்கு கூட, பாதிக்கப்படும் மக்களை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலமும், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

நேற்று குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த நாகம்மாள் 22, பிரசவ வலியால் துடித்தார்.
மலைவாழ் மக்கள் குடியிருப்பு இளைஞர்கள் 7 கிலோ மீட்டர் தூரம், கரடு, முரடான மலைப்பாதையில், தொட்டில் கட்டி தூக்கி வந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆபத்தான நிலையில் கர்ப்பிணி உள்ளதால், மலைவாழ் மக்கள் அதிருப்தியடைந்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:

வன உரிமை சட்டத்தின் படி, மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு ரோடு வசதி கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்கு, 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, டெண்டர் விட்டும், திருப்பூர் ஆட்சியர் உத்தரவு இருந்தும், வனத்துறையினர் சாலை அமைக்கவிடாமல் தடுத்தனர்.

தற்போது, இரு உயிர்கள் ஊசலாடி வருகின்றன. அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு மட்டும் ஓட்டு கேட்டு வருகின்றனர். எங்களுக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

தேர்தலுக்கு யாரும், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது; மக்களவைத் தேர்தலை மலைவாழ் மக்கள் புறக்கணிக்கிறோம்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top