திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு, அமீர் அலுவலகம் உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக ,சென்னையில் இயக்குனர் அமீரின் அலுவலகம், வீடு மற்றும் திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு வீடு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 09) சோதனை நடத்துகின்றனர்.

இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. அயலக அணியின் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து, ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் சம்மன் அனுப்பி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார்.

இயக்குனர் அமீர், கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர், மேலும் இயக்குனர் அமீர் மற்றும் ஜாபர் சாதிக் இருவரும் இணைந்து காபி ஷாப் ஒன்றை  தொடங்கியுள்ளனர். இதையடுத்து, அமீருக்கு நோட்டீஸ் அனுப்பிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணைக்கு 2ம் தேதி டெல்லியில் உள்ள அலுலகத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. இந்த நோட்டீசையடுத்து, டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அமீர் நேரில் ஆஜரானார். 11 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைக்கு பின் அமீர் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தகவல்படி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்ளிட்டோரின் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, தி.நகரில் உள்ள அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கீழ்ப்பாக்கத்தில் ஷேக் முகமது நாசர் என்பவரின் வீடு, நீலாங்கரையில் உள்ள புகாரி ஓட்டல் நிறுவன உரிமையாளரின் வீடு, கொடூங்கையூர் உள்பட பலரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கப்பெறலாம் என கூறப்படுகிறது. இதில் திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு, அமைச்சர் உதயநிதிக்கு நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திமுகவின் முக்கியப்புள்ளிகள் இதில் சிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top